search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silent Spectator"

    பா.ஜனதாவின் அத்துமீறல்களை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது, மக்களை ஏமாற்றி விட்டது என்று ப.சிதம்பரம் கூறினார். #PChidambaram #ElectionCommission #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்?

    எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு இந்தியரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரும் அச்சத்துடனே இருக்கிறார்கள்.

    பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பா.ஜனதா அல்லாத அரசே மத்தியில் அமையும். காங்கிரசும், அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றினால், 3-வது தடவையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.

    இந்தியாவில், தேர்தல் சமயத்தில், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதே இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பா.ஜனதா வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?

    துப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்குமா? பா.ஜனதா வேட்பாளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #PChidambaram #ElectionCommission #Congress
    ×