search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaganga Collector Jayakanthan"

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.
    சிவகங்கை:

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலமாக அறிய உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் குடிநீர் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள உணவுபாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இந்தத் துறையின் இணையதள சேவையை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவு பாதுகாப்புதுறை உரிம எண்ணை பயன்படுத்தி, அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் ஆறுமாதம், ஒருஆண்டு பரிசோதனை அறிக்கை, அவர்களின் ஐ.எஸ்.ஐ. மற்றும் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உணவு பாதுகாப்புதுறையின் எண் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் தரத்தையும் அறிந்துகொள்ளலாம்.

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்தல், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அதை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வினியோகிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சின்ன பெட்டிக்கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பீடா ஸ்டால், குளிர்பான கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஓட்டல், இறைச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் இது குறித்து புகார்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×