search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivanthi Aditanar manimandapam"

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #SivanthiAditanar #Manimandapam
    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    தமிழ் மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, சாதாரண மக்கள் நலன் காப்பதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நற்பணிகளை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் அவரது புகழ் வளர்க, ஓங்குக என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

    தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.

    பாமரரும் பத்திரிகையை படிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

    தினத்தந்தி பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து போது தனது திறமையால், கடின உழைப்பால் நாளிதழின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் பாடுபட்டவர். பத்திரிக்கை உலகில் கொடி கட்டி பறந்த செம்மனச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் கல்வி, தொழில், விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்தவர்.

    குறிப்பாக தொண்டுள்ளம் கொண்டவராக ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கு உதவிகளை செய்த பண்பாளர். இவர் செய்த திருப்பணிகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதற்காக டாக்டர் பட்டம் பெற்ற பாராட்டுக்குரியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற வாழ்நாள் சாதனையாளர் என்று சொல்லலாம்.

    எனவே சரித்திரமாக வாழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய நற்பணிகளுக்கு தமிழக மக்களின் வாழ்த்தும், பாராட்டும் என்றுமே உண்டு.

    மேலும் தமிழக அரசு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது சாலச்சிறந்தது.

    தமிழ் மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, சாதாரண மக்கள் நலன் காப்பதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நற்பணிகளை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் அவரது புகழ் வளர்க, ஓங்குக என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா:-

    தினத்தந்தி நாளிதழின் மறைந்த அதிபர் ஐயா சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வழியாக திருச்செந்தூரில் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழா நாட்டியிருப்பது தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெரியவர் ஐயா ஆதித்தனார் வழியில் சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய தொண்டிற்கு ஒரு அடையாளம் என்றே சொல்லலாம்.

    பத்திரிகைத்துறையில் இருந்து கொண்டு பல்வேறு துறைகளில் ஆன்மீகம், கல்வி, வணிகம், விளையாட்டு தமிழ்மொழி வளர்ச்சி என, தன் இருப்பினை உணர்த்தி தனது முத்திரையை தனித்தே பதித்துச் சென்ற பண்பாளர் ஐயா சிவந்தி ஆதித்தனார்.

    இளைய தலைமுறையினருக்குள் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி பத்திரிகைத் துறையில் மாபெரும் புரட்சியைச் செய்ததோடு, மக்கள் சேவையிலும் தனது பணியினை தொய்வின்றிச் செய்திருப்பவர் என்றால் மிகையாகாது. மறைவிற்கு பின்னும் தனது சேவையினால் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  #SivanthiAditanar #Manimandapam
    2019‍-ம் ஆண்டுக்குள் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    சென்னை:

    சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய அதேநேரத்தில் திருச்செந்தூரில் சிவந்தி அகாடமியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.

    விழாவில் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இன்று முதல் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணிமண்டப பணிகள் வேகமாக நடைபெறும். மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும். 2019‍-ம் ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக முதல்-அமைச்சர் கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

    இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிய தமிழக முதல்-அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத்தொடர்ந்து மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நான் சிவந்தி ஆதித்தன் பேசுகிறேன். எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியமைக்கு என் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதையடுத்து பா.ஆதவன் ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்- அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அடிக்கல் நாட்டப்பட்டதும் காணொலி காட்சியில் மணிமண்டபத்தின் முழு மாதிரி தோற்றம் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கின.

    பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள் பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வசந்தகுமார், இன்பதுரை.

    திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்த ராஜ், தாசில்தார் தில்லை பாண்டி, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனன்.


    முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் வி.பி.துரை, வக்கீல் காமராஜ், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ், காமராஜர் ஆதித்தனார் கழகம் சிலம்பு சுரேஷ், கருங்கல் ஜார்ஜ்.

    முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா, துணைத்தலைவர் ஜெயக்குமார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நெல்லை மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் தோப்புமணி, துணைத்தலைவர் தர்மர்.

    நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    சென்னை:

    ‘தினத்தந்தி’ அதிபராக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி காட்டிய வித்தகர் ஆவார்.

    பத்திரிகை துறையில் மட்டுமின்றி விளையாட்டு, கல்வி, ஆன்மிகம், சமூக சேவை ஆகிய துறைகளிலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏராளமான ஒப்பற்ற நற்பணிகள் செய்து சாதனை படைத்தார்.

    கால் பதித்த துறைகளில் எல்லாம் வரலாற்று தடம் எனும் முத்திரைப் பதித்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகள், பட்டங்கள் சிறப்பு சேர்த்தன. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மரணம் அடைந்தார்.

    சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லத்தின் ஒரு பகுதி “நினைவு இல்லம்” ஆக மாற்றப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒப்பற்ற உயர்வான சேவைகளை தமிழக மக்கள் என்றென்றும் போற்றி நினைவு கூற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையடுத்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. திருச்செந்தூரில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் திருச்செந்தூர்- தூத்துக்குடி பிரதான சாலையில் ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரிக்கு அருகில் சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 60 சென்ட் இடம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 78.41 சதுர மீட்டரில் கண்கவர் வகையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்திலும், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி வளாகத்திலும் ஒரே நேரத்தில் நடந்தது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் 60 சென்ட் பரப்பளவில் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்- அமைச்சர் தலைமை ஏற்று தங்கள் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டும்படி மெத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது மங்கல இசை இசைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் தனது தந்தை சி.பா.ஆதித்தனாரைப் பின்பற்றி 1959-ம் ஆண்டு தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய சேவையை பாராட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

    மேலும், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப்ஆகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என அறிவித்திருந்தார்.


    அதன்படி, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பணிகளை போற்றுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டணம் கிராமத்தில் 60 சென்ட் பரப்பளவில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நிறைவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் பொ.சங்கர் நன்றி கூறினார். அவர் கூறியதாவது:-

    பத்திரிகை துறையில் முத்திரை பதித்த மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருச்செந்தூர் வட்டம் வீர பாண்டியன் பட்டணத்தில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் அவர்களுக்கு எங்கள் துறைச் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    அதுபோல விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த துணை முதல்- அமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தலைமை செயலாளருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    ×