search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரகுப்தன்"

    உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார்.
    குடும்பத்தில் கணக்குகளைச் சரியாக கவனித்தால் குடும்பம் செழிக்கும். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்தால் நிறுவனம் வளர்ச்சி பெறும். அதுபோல் உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார்.

    பணபலமோ, ஆள் பலமோ, அரசியல் அழுத்தமோ ஏதுமின்றித் தன் கடமையைச் செவ்வனே செய்து வருபவர் இவர். எம தர்மராஜனின் உதவியாளரான இவர், நேர்மையான முறையில் தன் கடமையைச் செய்து வருகிறார்.

    இந்தியாவில் கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு பெற்று தனிக்கோவிலாக விளங்குவது, காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

    காஞ்சி மாநகரைப் பற்றி திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான சுவாமிகள் இயற்றிய காஞ்சிபுராணம் பெருமைப்படுத்துகின்றது.

    சித்திரகுப்தனுக்குப் பல்வேறுவிதமான புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வைதீகத் தெய்வம் சித்திரகுப்தன் ஆவார். வடஇந்தியாவில் பெரும் வணிகர்களின் மதமாக விளங்கிய சமண மதத்தின் தெய்வமாக இவர் கூறப்படுகிறார். சமண மதம் மட்டுமே இறப்பினை முன்னிலைப்படுத்தி அறம் கூறும் வழக்கத்தினை, தமிழ்நாட்டில் உருவாக்கியது. எனவே, மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இது வைணவ சமயத்தில் கூறப்படுவது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார்,

    சித்திரகுப்தர் எழுத்தால்
    தென்புலக் கோன்பொறி யொற்றி
    வைத்த விலச்சினை மாற்றித்
    தூதுல ரோடி யோளித்தார் – எனக் கூறுகிறார்.

    சித்திரகுப்தர் எழுதிய கணக்குப்படி எமதர்மராஜன் காலமுத்திரை இடுகிறார். ஆனாலும், திருமாலின் அடியாரைக் கண்டால் எமதூதர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என இப்பாடல் குறிப்பிடுகிறது.

    இனி மற்றொரு கதை. கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியங்களை எழுதும் எமதர்மராஜன் தனக்குப் பெருத்த பணிச்சுமையாக இருந்ததால், தனக்கு உதவும் பொருட்டு, ஒரு உதவியாளர் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார். அதன்படி பிரம்மாவிடம் கட்டளையிட, இதனைச் சூரியன் மூலம் நிறைவேற்ற விரும்பினார். சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.

    சூரியன் வானில் தோன்றும் போது ஒரு வானவில் உருவானது. அந்த வானவில்லே நீளாதேவி என்ற பெண்ணாக மாறியது. அப்போது நீளாதேவி என்ற தேவதை சூரியனின் பேரழகில் மயங்கி தன்னிலையினை இழக்கின்றாள். அதன் பயனாய் மகனாகத் தோன்றியவர் சித்திரகுப்தன். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால், சித்திரகுப்தன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. சித்திரகுப்தன் கரங்களில் எழுத்தாணியும் ஏடும் இறைவன் தந்தார் என தலபுராணம் கூறுகிறது.

    சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு எனப்பொருள்படும். மனிதர்களின் மனதில் மறைவாக உள்ள விஷயங்களை எழுதுவதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என இத்தலபுராணம் கூறுகிறது.

    இவருக்குத் துணையாக எமதூதர், புறா, ஆந்தை, நான்கு கண்கள் கொண்ட இரண்டு நாய்கள் ஆகியவை உதவியாட்களாகப் பணிபுரிகின்றனர்.

    இவரது அமராவதியில், பிரபாவதி, நீலாவதி, கர்ணீகை என்ற மூன்று தேவியரோடு வாழ்ந்து கொண்டு மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாகக் கணக்கெடுத்து வருகின்றார் என்பது புராணம்.

    இதேபோல, இவரின் பிறப்பினைக் கூறும் கதை இது. சித்திரகுப்தன் காமதேனுவின் கருவில் தோன்றிய மகன் என்று புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் சித்திரகுப்தனுக்குப் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவை சித்திரகுப்தனுக்குப் பயன்படுத்துவதில்லை.

    சித்திரகுப்தனுக்கு ஆலயம் அமைப்பதை ஹேமாத்திரியின் சதுர்க்க வர்க்க சிந்தாமணி என்ற சிற்பநூல் கூறுகிறது.

    தனிக்கோவிலாக, சித்திரகுப்தனே கருவறையில் வீற்றிருக்கும் பிரதான தேவதையாக விளங்குவது காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

    சென்னிச்சோழன் அமைச்சராக இருந்த கனகராயன் என்பவன் சித்திரகுப்தனுக்கு ஆலயம் எழுப்பியதை வரலாறு எடுத்துக் கூறுகிறது.

    மூன்று நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் நம்மை வரவேற்க, நேர் எதிரே மூலவராக சித்திரகுப்தன் எளிய வடிவில் அமர்ந்த கோலத்தில் அருள் வழங்குகின்றார். தன் வலது கரத்தில் எழுத்தாணியும், இடது கரத்தில் ஏடும் தாங்கி, தென்முகமாய்க் காட்சியளிக்கின்றார்.

    இவரைத் தரிசிக்கும் போதே, நமது வினைகள் அனைத்தும் நம் கண் முன்னே நிழலாடுகின்றன. நாம் இப்பூவுலகை விட்டு அகலும் முன்பு வரை நம் வாழ்வில் புரிந்த அத்துணை பாவ, புண்ணியங்களையும் இவர் தன் பதிவேட்டில் எழுதி வருவது நம் நினைவிற்கு வருகிறது. ஒரு செயலைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாவக் கணக்கிலும், புண்ணியக் கணக்கிலும் பிரித்தெழுதும் இவரின் கடமையை நினைத்து நம் சிந்தனை செல்கின்றது. இதனால் சிறு தவறு கூட தவறியும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி நிற்கிறது.

    கருவறையின் வலதுபுறம் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சன்னிதி, அதனருகே சித்திரகுப்தன், அவரது துணைவியார் கர்ணீகை அம்பாள் ஆகிய உற்சவ திருமேனிகள் எழிலுடன் காட்சி தருகின்றன. ஐயப்பன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் துர்க்கை சன்னிதியும், அருகே நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம், தீப மண்டபம் அமைந்துள்ளது.

    அமைவிடம்

    காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தின் வெகு அருகில், நெல்லுக்காரன் தெருவில் தெற்கு முகமாக சுமார் 6000 சதுர அடியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
    ×