search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொள்ளைக்காது சித்தர்"

    • புதுவையில் புகழ் பெற்று விளங்குகிறது மணக்குள விநாயகர்.
    • மணக்குள விநாயகரை வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைப்பர்.

    புதுவை ஒரு ஆன்மீக பூமி. புதுமைகள் பல புரிந்த பல சித்தர்களின் பாதம் பட்ட அருள் பூமி. பூஜைகளும் மணி ஓசைகளும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி

    நாட்டில் எத்தனையோ பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. புதுவையில் புகழ் பெற்று விளங்குகிறது மணக்குள விநாயகர்.

    இதன் பெயரிலே ஒரு புதுமை. அது மட்டுமா? இந்த விநாயகரோடு புதுவை வரலாறு பின்னிக்கிடக்கிறது.

    இது ஆன்மீக தலம் மட்டும் அல்ல ஆன்றோர்கள் பலர் போற்றிப்புகழ்ந்த கோவிலாக திகழ்கிறது. நம் நாட்டினர் மட்டுமல்ல அயல்நாட்டினரையும் கவர்ந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

    புதுவையில் மணக்குள விநாயகர் தெருவில் இந்த கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. நாள்தோ றும் இங்கு பக்தர்கள்கூட்டம் நிரம்பி வழிகிறது. . இந்த இடத்தில் மணக்குள விநாயகர் கோவில் எப்படி தோன்றியது? அதற்கு நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டும்.

    புதுச்சேரி அந்த காலத்தில் மிகப்பெரிய நகரமாக திகழவில்லை. ஆனால் நாகரிகம் செழித்த, செல்வந்தர்கள் கொழித்த அழகான பேரூராக விளங்கியது. இன்று மணற்குள விநாயகர் கோவில் தெரு என்று அழைக்கப்படும் தெருவானது அன்று நெசவாளர் தெரு என்று அழைக்கப்பட்டது.

    அழகான தெருக்கள் அதன் இரு பக்கங்களிலும் நிழல் தரும் அருமையான மரங்கள் இருந்தன. இந்த மரநிழலில் அதிகாலையிலே கைத்தறி பாவு நீட்டுதல் என்ற தொழில் நடைபெற்றது. ஏராளமான தொழிலாளர்கள் அதில் ஈடுபட்டனர். இங்கு நெய்யப்பட்ட துணிகள் மேல்நாட்டுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன.

    புதுவையில் கடற்கரையை யொட்டி பல உப்பங்கழிகள் இருந்தன. இன்று உப்பனாற்று கால்வாயாக உள்ள அவை செஞ்சி சாலையை யொட்டி அமைந்திருந்தது. இந்த உப்பனாற்றின் கீழ் மருங்கில் இன்றைய நேரு வீதி சந்திப்பில் மணல் நிரம்பிய குளக்கரை இருந்தது. அங்கு அரச மரத்தின் அடியில் ஒரு மகா ரிஷியால் மணக்குள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    அந்த சிலைக்கு மேல் ஒரு கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் விநாயகபெருமானுக்கு கருவறை அமைத்து அதன் உள்ளே பெருமானை நிலை நிறுத்தி வழிபட்டார்கள். அக்காலத்தில் விநாயகர் கருவறை, முன் அர்த்த மண்டபம் மட்டுமே இருந்தன.

    கோவிலை சுற்றி தோட்டம். நந்தவனம் அமைத்து மதில் சுவர் எழுப்பி வெளிக்கதவும் அமைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து, குளங்களில் நீராடி விநாயகரை வழிபட்டு தங்கள் வேலைகளை மக்கள் தொடங்கினார்கள். இந்த விநாயகரின் வடிவம் தொன்மைகால சிற்ப கலை நுணுக்கங்களோடு மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டது. 2 கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் விநாயகர் காணப்பட்டார்.

    பிரெஞ்சுகாரர்கள் புதுவையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இந்த கோவில் தோன்றி விட்டது. 1666-ம் ஆண்டுக்கு முன்பே இந்த கோவில் உருவாகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த கோவிலில் இருந்த விநாயக படிமத்தைத்தான் பிரெஞ்சுகாரர்கள்3 முறை கடலில் போட்டதாகவும் விநாயகரும் மறுநாள் காலையில் கருவறையில் இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    மணக்குள விநாயகர் கோவில் வழிபாட்டுக்கு பிரெஞ்சுக்காரர்கள் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்கள். பின்னர் விநாயகரின் பெருமையை உணர்ந்தார்கள், வியந்தார்கள், பயந்தார்கள். இதையடுத்து விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்து கொள்ளவும் உற்சவங்கள் நடத்திக்கொள்ளவும் பிரெஞ்சுகாரர்கள் அனுமதி வழங்கினர்.

    கோவில் இருந்த இடத்தில் முன் மண்டபம் கட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்கினார்கள். பிற்காலத்தில் கோவில் மேலோங்குவதற்கும் துணை புரிந்தனர். இதனால் எளிமையாக குளக்கரையில் கீழ்கரையில் ஒரு அரச மரத்தின் கீழ் வீற்றிருந்த விநாயகர் கூரைவேயப்பட்ட நிழலில்அமர்ந்தார். கருவறை மண்டபம் ஏற்படுத்திக்கொண்டார்.

    தனக்கு எதிராக செயல்பட்ட பிரெஞ்சுகாரர்களை கொண்டே தன் கோவில் முன் மண்டபம் அமைத்துக்கொண்டார். நாளும் சுடர்விட ஒளிவிளக்கு ஏற்றிக்கொண்டார். தெருவீதி உலா, உற்சவங்கள் நடைபெற வழிவகுத்துக்கொண்டார். இடையூறு கொடுத்த வெள்ளையர்களே பின்னர் மணக்குள விநாயகரை வணங்கினார்கள். எனவே மணக்குள விநாயகரை வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைத்தனர்.

    தொள்ளைக்காது சித்தர் இந்த மணக்குள விநாயகரை தினமும் வழிபட்டு வந்தார். அவர்மறைவுக்கு பின்னர் கோவிலில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின.

    வழிபாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் இருக்க புதிய விநாயகர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி பழைய விநாயகர் சிலையின் அருகில் புதிய விநாயகர் சிலையை நிறுவினார்கள். 1930-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர் இது நடந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    தற்போது கோவிலின் கருவறையில் மூல விநாயகருக்கு வலது பக்கம் நாக பந்தச்சிலையும் இடது பக்கம் மூத்த முதல்வனாகிய பழைய விநாயகர் சிலையும் இருப்பதை காணலாம். இன்றும் இந்த சாமி சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

    விநாயகர் பெருமை

    1.பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூயமணியே! நீ எனக்குச்

    சங்கத் தமிழ் மூன்றுந் தா!

    -அவ்வையார்

    2.வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்: மாமலராள்

    நோக்குண்டாம்: மேனி நுடங்காது பூக் கொண்டு

    துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்

    தப்பாமற் சார்வார் தமக்கு

    -அவ்வையார்

    3.வாழ்க புதுவை மணக்குளத்து

    வள்ளல் பாத மணிமலரே-!

    ஆழ்க உள்ளம் சலனமிலாது!

    கண்ட வெளிக்கண் அன்பினையே

    சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!

    தொலையா இன்பம் விளைந்திடுக!

    வீழ்க கலியின் வலியெல்லாம்!

    கிருத யுகந்தான் மேவுகவே!

    -பாரதியார்

    ×