search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சப்ளை"

    • அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் அப்பகுதியில் 24 மணிநேரமும் வினியோகிக்கப்படும்.
    • இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளன.

    போரூர்:

    சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தினமும் சுமார் 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக தினமும் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இதற்கான பணிகளை மெட்ரோவாட்டர் தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர், பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மின்சாரம் போல் கணக்கிட உதவும். வளசரவாக்கம் மண்டலத்தில் மெஜஸ்டிக் காலனி(வார்டு152), ராமகிருஷ்ணாநகர் (வார்டு149) பகுதியில் 8212 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி ரூ.69.64 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் அப்பகுதியில் 24 மணிநேரமும் வினியோகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 70 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.

    ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கணக்கிடும். இது மின்சார பயன்பாடு போன்று துல்லியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பயன்படுத்தும் குடிநீருக்கான கட்டணமும் மின்சார கட்டணம் போன்று பயன்படுத்தும் அளவை பொருத்து இருக்கும்.

    குடிநீர் சப்ளை செய்வதற்காக மெஜஸ்டிக் காலனியில் 19 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மற்றும் பூமிக்கு அடியில் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராமகிருஷ்ணா நகரில் 29 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் உள்ளன. இதற்காக 100 மி.மீட்டர் முதல் 450 மி.மீட்டர் விட்டம் வரையிலான குடிநீர் பைப்புகள் சுமார் 84 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளன. பைப்புகள் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் பரிசோதித்து வருகிறோம். 12 மீட்டர் உள்ள பைப்புகளில் ஆரம்பம் முதல் கடைசி வரை சீரான அழுத்தத்தில் தண்ணீர் செல்ல திட்டமிட்டு 6 இடங்களில் வால்வுகள் அமைக்கப்படுகிறது. தண்ணீர் செல்வதில் பிரச்சனை இருந்தால் கூடுதல் அழுத்தம் கொடுத்து தண்ணீர் சப்ளை செய்யப்படும். எனவே பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தண்ணீரை தங்களது தொட்டிகளில் பிடித்து வைத்துக்கொள்ளலாம் என்றார்.

    ×