search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாட்டு அரசியல்"

    • 2021ல் திமுக மற்றும் அதிமுக, முறையே 37 மற்றும் 33 சதவீத வாக்குகள் பெற்றன
    • பெரிய கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவி சிறு தலைவர்களை கவர்கிறது

    தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உள்ளன.

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பதிவான வாக்குகளில், தி.மு.க. சுமார் 37 சதவீதமும் அ.தி.மு.க. சுமார் 33 சதவீதமும்  பெற்றன.


    இரு கட்சிகளை தவிர தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை முறையே 4.26 சதவீதம் மற்றும் 2.61 சதவீதம் என வாக்குகளை சேகரித்தன.

    இவை தவிர,  சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க. ஆகியவை குறைந்த அளவே வாக்கு சதவீதத்தை சேகரித்தன.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் தற்போது வரை உறுதியாகவில்லை. இந்நிலையில், சிறு கட்சிகளின் நிலைப்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

    வன்னிய சமுதாய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர்களின் நலனுக்கான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தி.மு.க.  அல்லது அ.தி.மு.க. ஆகிய  கட்சிகளுடன் கூட்டணி சேர்வதையே விரும்புகின்றன.


    (நாம் தமிழர் கட்சி, அனைத்து மத்திய, மாநில மற்றும் ஊராட்சி தேர்தல்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது).

    தங்கள் சுயபலத்தை அக்கட்சிகளும், பொதுமக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் தனித்து போட்டியிட்டால்தான் அவர்களுக்கான வாக்கு வங்கியின் உண்மையான சதவீதம் வெளிச்சத்திற்கு வரும்.


    சாதிவாரி கணக்கெடுப்பிற்கு வலியுறுத்தி தங்கள் சாதி வாக்கு வங்கியின் பலத்தை காட்டிக்கொள்ள முயலும் கட்சிகள் கூட தனித்து போட்டியிட்டு பலத்தை காட்ட முன்வர மறுக்கின்றன.


    மேலும், சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குதல், பாதுகாப்பான வாழ்க்கை, சிறப்பான உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியமான அம்சங்களில் நிலவும் சிக்கல்களை தீர்க்க, தங்கள் பார்வை, சித்தாந்தம், தீர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடையே எடுத்து சொல்லி பிரசாரம் செய்து, ஆளும் கட்சிகளின் குறைகளை ஊடகங்களின் வழியே கேள்வி கேட்டு தங்களை வளர்த்து கொள்ள எந்த ஒரு கட்சியும் முயல வேண்டும்.


    ஆனால், கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி பேரங்களில் கிடைக்கும் குறைந்த இடங்களை "போதும்" என பெற்றுக் கொண்டு, பெரும் கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவியுடன் எளிதாக வெல்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.


    இந்நிலை தொடர விமர்சகர்கள் முன்வைக்கும் காரணங்கள்:

    * புது கட்சிகளின் தலைவர்களை பார்க்க மக்கள் கூட்டமாக வந்தாலும், வாக்களிக்கும் போது அவர்களை மறந்து விடுகின்றனர்.

    * 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., தனித்தனியே 30 சதவீதத்திற்கும் மேலாக வாக்குவங்கியை சிதறாமல் வைத்துள்ளன.

    * வாக்களிக்க பணம் கொடுக்கும் வழிமுறை தமிழகத்தில் ஆங்காங்கே நிலவுவதால், சிறு கட்சிகளின் சித்தாந்தங்கள் கவர்ந்தாலும், பணம் தரும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பது என்னவோ தொடர்கிறது.

    * பொதுவாக கட்சிகளின் தலைவர்களிடம் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம். தலைவர்கள், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என வாக்காளர்கள் கருதுகின்றனர்.

    * சட்டசபை மற்றும் மக்களவையில் ஸ்திரமான ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். 

    * பெரிய கட்சிகள் சாதி, செல்வாக்கு மற்றும் நிதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் போது தங்கள் தொகுதியில் வெல்வதற்கு வழிமுறைகளை வேட்பாளர்களே கண்டறிகின்றனர். இதை சிறு கட்சிகளால் எதிர்க்க முடிவதில்லை.

    சுயபலத்தை காட்டி தங்களால் தனித்து ஜெயிக்க முடியாது என்றால் பெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதை விட, கட்சியையே கலைத்து விட்டால்,  நல்லது என்ற எண்ணமும் மக்கள் மனதில் தோன்றக்கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

    ×