என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணமே அழகு"
- காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம்.
- மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
காதல், முறை தவறிய உறவுகள் போன்றவற்றில் சிக்கி இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் அவலம் அதிகமாக காணப்படுகிறது. காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம். அந்த நேசத்தைக் கண்டறிவது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. தூய அறிவாலும், மாசற்ற உள்ளத்தாலும் உணர்வெழுச்சி பெற்று ஒருவரை ஒருவர் நேசிப்பது இன்று மிகமிகக் குறைவே.
காதல் என்ற பெயரில் நடப்பதெல்லாம் உடல் மீதான வேட்கையே. பெரும்பாலான காதலர்களின் வாழ்வு, திருமணத்திற்குப் பின் ஜொலிக்காமல் இருப்பதற்கான காரணம் இதுதான். சமூகத்தில் பரவி நிற்கும் `ஓடிப்போதல்' என்ற நோய்க்கு பெரும்பாலும் இந்த உடல் வேட்கையே காரணமாக அமைந்துள்ளது.
அதே சமயம் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை உடல் வேட்கையின்றி உண்மையாகவே திருமணம் செய்துகொள்ள விரும்புவதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.
அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன்பு, ஓர் இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அந்தப் பெண் உறுதியளித்தார். பிறகு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்று, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் என்பது வரலாறு.
தனிமையில் சந்தித்தல்
அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருப்பதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. திருமண உடன்படிக்கை நடக்காதவரை மணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் அந்நியப் பெண்ணே. திருமணம் செய்வதற்காக அவளைப்பார்ப்பதற்கு மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டதாகவே தொடர்ந்து இருக்கும்.
நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் எவரும் ஓர் அந்நியப் பெண்ணுடன் - அப்பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவரும் உடன் இல்லாதபோது - தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்". (நூல்: அஹ்மத்)
தனித்திருப்பதால் ஏற்படும் ஆபத்து
மக்களில் பலர் தங்களது குடும்ப பெண்களை, திருமண ஆலோசனை மட்டுமே நடந்த அந்நிய ஆடவருடன் தனிமையில் இருப்பதற்கும், மனம்போன போக்கில் பேசிப்பழகவும், ஊர் சுற்றுவதற்கும் அனுமதிக்கின்றனர். இதன் பிரதிபலன் என்னவென்றால், பெண்ணுக்கு அவளுடைய கண்ணியம், மரியாதை, சில சமயம் கற்பும் நஷ்டமடைகின்றது.
இன்னும் சிலர் நேர்மாறாக உள்ளனர். திருமண ஆலோசனை வேளைகளிலோ, பெண் பார்க்கும் போதோ தன்னுடைய பெண் பிள்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை. முதல் இரவில் தம்பதிகள் ஒருவரையொருவர் பார்ப்பதைத்தவிர அதற்குமுன் பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதே இவர்களுடைய வாதம். முதன்முதலாக அந்த இரவில் திடீரென ஒருவரையொருவர் சந்திக்கும்போது மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக இருந்து விட்டால் அதுவே நிரந்தர கருத்து வேற்றுமைக்கும், பின்னர் பிரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
திருமணமே அழகு
பெரும்பாலும் பெற்றோர்களின் அலட்சியப் போக்கு, வறுமை, ஒழுக்கமின்மை என்பவை தவறுகளுக்கான காரணங்களாகத் திகழ்கின்றன. வயது வரும்போது அந்தந்த பருவத்திற்கே உரிய உணர்வுகள் உடலில் தோன்றுவது இயல்புதான். அவை கட்டு மீறாது, ஒழுங்குபடுத்தி மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
மனிதன் தனது பாலுணர்வையும், இச்சையையும் தீர்த்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையே திருமணம். மன உளைச்சலில் இருந்து மனிதனை அது தடுக்கிறது. பதற்றத்தில் இருந்து மனித மனங்களை சாந்தப்படுத்துகிறது. தடை செய்யப்பட்டவற்றை (ஹராமான) பார்க்கும் மனோபாவங்களில் இருந்து உள்ளங்களை அது திருப்புகிறது. இறைவன் அனுமதித்த வழிமுறையின் மூலம் அன்பும் மனநிறைவும் அடையும்படிச் செய்கின்றது.
திருக்குர்ஆன் இதனையே பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: "மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக!
மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21)
குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒருபோதும் கிடைப்பதில்லை. தற்காலிக இன்பத்திற்காக நிலையான இன்பத்தை இழந்து விடுவதும் மூடத்தனம். ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு திருமணத்தைவிடச் சிறந்த உறவு எதுவுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது புனிதமானது. அது ஓர் அறச்செயல். அதனை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளாமல் மணம் செய்து காதல் செய்வதே உகந்தது. அழகான பெண்ணை அல்லது ஆணை அடைவதல்ல காதல். அடைந்த மனைவியை அல்லது கணவனை அழகாக நேசிப்பதே காதல்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்