search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன சந்தை"

    • கொளத்தூரில் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை உருவாக்க திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
    • சந்தைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி 10 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி அடைந்து

    உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியாக இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சரின் நேரடி கவனமும் அடிக்கடி ஆய்வு செய்வதாலும் கீழ் மட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை எந்த பணியையும் தொய்வில்லாமல் செய்கின்றனர். கொளத் தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    அந்த அடிப்படையில் கொளத்தூரில் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை உருவாக்க திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.23.50 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பணியினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நவீன சந்தையில் 'பிரஷ்' காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய 2 தளங்கள் அமைக்கப்படுகிறது.


    தரை தளத்தில் காய்கறி, பழக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் பகுதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக 28 கடைகளும் பொது மக்கள் காத்திருப்பதற்காக ஒரு பகுதியும் கட்டப்படுகிறது.

    முதல் தளத்தில உலர் உணவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 36 அமைகிறது.

    2-வது தளத்தில் பொது மக்கள் வசதிக்காக 41 கடைகள் செயல்பட வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சந்தைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. 85 மோட்டார் சைக்கிள்களும், 58 கார்களும் இதில் நிறுத்தக் கூடிய வகையில் இடவசதி அளிக்கப்படுகிறது. சந்தைக்கு குடும்பமாக வந்து பொருட்களை வாங்கி செல்ல ஏதுவாக விரிவான வசதி செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் சிரமம் இல்லாமல், நெரிசல் இல்லாமல் சந்தைக்கு செல்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்படுகிறது. மெகா சூப்பர் மார்க்கெட் போல இந்த நவீன சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கொளத்தூர், பெரியார் நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், பூம்புகார் நகர், ரெட்டேரி, ராஜமங்கலம் விநாயகபுரம் உள்ளிட்ட மக்களை கவரும் வகையில் நவீன சந்தை உருவாகிறது.

    59,390 சதுர அடியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் சந்தையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை செய்து வருகின்றனர். மிக விசாலமான இட வசதியுடன் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறக்கூடிய வகையில் சந்தை கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

    வட சென்னையின் ஒரு முக்கிய அங்கமாக இந்த நவீன சந்தையை உருவாக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

    ×