search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்"

    • 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன்.
    • மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்

    திருவனந்தபுரம்:

    பகலில் ஆட்டோ டிரைவர்.... இரவில் ஜிம்மில் பயிற்சி... சாதனை படைத்தும் நிதி இல்லாததால்... சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத சூழல். இது கேரள மாநில ஆட்டோ டிரைவர் ஒருவரின் சோகம்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் பொழுது போக்காக தனது பள்ளிப் பருவத்தில் மல்யுத்தம் செய்ய தொடங்கினார். உடற்பயிற்சி கூடம் சென்ற அவர், அங்கு கை மல்யுத்த விளையாட்டை அறிந்து அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். படிப்புக்கு பிறகு ஆட்டோ டிரைவரான சவுகத் அலி, பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தேசிய கை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்ற அவர், அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும், மால்டோவாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். ஆனால் நிதி இல்லாமை காரணமாக அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளார்.

    இதுபற்றி சவுகத் அலி கூறுகையில், நான் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது கட்டுமான தளங்களில் வேலை பார்த்தேன். அப்போது செங்கல் சுமந்தது, வலுவான தசைகளை உருவாக்க உதவியது. 18 வயதில் தொழில் ரீதியாக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்றேன். இது வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றுள்ளேன். 10 முறை தேசிய அளவிலான சாம்பியன் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால் போதிய நிதி திரட்ட முடியாததால் அதில் பங்கேற்க முடிவதில்லை. தற்போதும் நிலுவை தேதிக்கு முன்னதாக ரூ.1.8 லட்சம் திரட்ட வேண்டி உள்ளது. அது என்னால் முடியாது.

    தற்போது எனது மனைவி நஜ்முன்னிசா, மகன்கள் முகமது இர்பான், முகமது ஷர்பான் ஆகியோரும் கை மல்யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், மனைவி நஜ்முன்னிசா மாநில ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாமல் இருப்பது வேதனையாக தான் உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் என்றார்.

    ×