search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Zonal Council Meeting"

    தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாட்டில் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. #UnionHomeMinister #ZonalCouncilMeeting
    பெங்களூரு:

    மத்திய உள்துறை சார்பில் 28-வது தென்மண்டல முதல்-மந்திரிகள் குழு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர், ஆந்திரா, கேரள நிதி மந்்திரிகள், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பிறகு மத்திய அரசின் உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மீனவர்கள் பாதுகாப்பு உள்பட 27 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை வழங்குதல் உள்பட 22 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் மீனவர்கள் பாதுகாப்பு, தீபகற்ப சுற்றுலா ரெயில்களை அறிமுகம் செய்வது, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் ஒரே சீராக நிதி ஒதுக்குவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வது உள்பட பல்வேறு முடிவுகள் அமல்படுத்தப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மீன்பிடி உரிமை தொடர்பாக பழவேற்காடு ஏரி விவகாரத்தில் ஆந்திரா-தமிழ்நாடு இடையே இருக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல், மீன் வளர்ப்புகளுக்கு உயிர்கொல்லி மருந்துகள் வினியோகம் செய்தல், இறால் ஏற்றுமதி, மாநில போலீஸ் துறைகளை நவீனப்படுத்த தேவையான திட்டத்தை அமல்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    தென்மண்டல முதல்-மந்திரிகள் குழுவின் அடுத்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த மாநாட்டில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போது கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் சில நேரங்களில் மற்ற மாநில மீன்பிடி பகுதிக்குள் நுழையும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் மீது, கடலில் மீன் பிடித்தல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, கிரிமினல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்கின்றனர். இது தேவையற்ற ஒன்று.

    தமிழகத்தில் அனல் மின்சார உற்பத்திதான் மிக முக்கிய அடிப்படையாக உள்ளது. எனவே தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி கிடைப்பதை மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும். இதை தமிழகத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் மத்திய ரெயில்வே துறை அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும்.

    மலைவாழ் மக்களை தேக்குமரக் கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து விலக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஜவ்வாதுமலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள், கல்வி, சந்தன மர மீட்டுறுவாக்கும் பணி மற்றும் சுற்றுலாவில் நிரந்தர வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி பாக்கித் தொகையை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும்.

    தமிழகத்தில் கேரளா, கர்நாடகா எல்லையையொட்டிய பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு பெருமளவில் ஒடுக்கப்பட்டு உள்ளது.

    பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு தரவேண்டிய ரூ.1,224 கோடியை உடனடியாக வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×