search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan army"

    இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீக்க ஐ.நா. சபையில் வற்புறுத்துவேன் என்று அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். #UN #MaithripalaSirisena
    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    பெரும்பாலானோர் காணாமல் போனதற்கு இலங்கை ராணுவம், கடற்படை, போலீஸ் ஆகியவையே காரணம் என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கண்டனங்கள் எழுந்ததால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, அங்கு செல்கிறது.



    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், சிறிசேனா 25-ந் தேதி பேசுகிறார்.

    இதுகுறித்து சிறிசேனா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களும், சில அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை நாங்கள் தடுத்ததுடன், நல்ல நட்புறவையும் உருவாக்கி உள்ளோம்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது, இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வற்புறுத்துவேன். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எங்களுக்கு சில சலுகைகள் அளிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.

    இதுதொடர்பாக விசே‌ஷ வேண்டுகோள் விடுப்பேன். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுத்துமூலமாகவும் கோரிக்கை விடுப்பேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார். #UN #MaithripalaSirisena
    ×