search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subramania Bharatiyar"

    ‘பாரதியாரின் கவிதைகள் மனிதநேயத்தை ஊக்குவிக்கும்’ என்று, டெல்லியில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VicePresident #VenkaiahNaidu #SubramaniaBharatiyar
    புதுடெல்லி:

    மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி டெல்லி ரமண மகரிஷி சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதி, சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாரதியாருக்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்கள்.

    விழாவில் வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியதாவது:-

    பாரதத்தாயின் தவப்புதல்வரான சுப்பிரமணிய பாரதியார் மிகச்சிறந்த கவிஞர். தமிழ் இலக்கியத்தில் எழுச்சியை ஏற்படுத்தியவர். அவரது படைப்புகள் மிகவும் புதுமையானவை. அவர் சுவாமி விவேகானந்தரை போல் மிக குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் சொல்லாலும், செயலாலும் நித்திய புகழை அடைந்தார்.

    சாதி இல்லை என்று சமத்துவத்தை ஆதரித்து பாடிய பாரதியார், பெண்களின் உரிமைகளுக்காக போராடினார். தமிழ்க் கவிதையின் முன்னோடியாக அவர் இருந்தாலும் தெலுங்கு மொழியை ‘சுந்தர தெலுங்கு’ என்று கூறியதன் மூலம் தனது பெருந்தன்மையை காட்டி உள்ளார்.

    காந்தியைப் போலவே பாரதியாரும் சுதந்திர இந்தியாவை பற்றி எழுதினார். கலாசாரம், இலக்கியம், வர்த்தகம் மற்றும் பிற அம்சங்களில் இந்தியா உலகை வழிநடத்தும் நாள் பற்றி கனவு கண்டார். அவரது எழுத்துகள் இந்தியாவை சுதந்திரத்தின் பாதையில் தலைமுறை தலைமுறையாக வழிநடத்தும். அவரது கவிதைகள் தேசபக்தி, மனிதநேயம் மற்றும் அன்பை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் டெல்லி தமிழ்ச்சங்க தலைவர் இந்துபாலா, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் மற்றும் நிர்வாகிகள், டெல்லி வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர். #VicePresident #VenkaiahNaidu #SubramaniaBharatiyar
    ×