search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Switzerland dairy"

    • சுவிஸ் நாட்டின் சீஸ் மற்றும் பால் பொருட்கள் உலக புகழ் பெற்றது
    • மணியோசை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றனர் பால் பண்ணையாளர்கள்

    மத்திய ஐரோப்பாவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நாடு, சுவிட்சர்லாந்து.

    உலகளவில் புகழ் பெற்ற சுவிஸ் சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நாட்டில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வழிமுறைகளை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

    பசுக்களை வயல்வெளிகளிலும், மலைகளிலும் மேய்வதற்கு அனுப்பி விட்டு அவற்றின் நடமாட்டத்தை சரியாக மேற்பார்வை செய்ய பசுக்களின் கழுத்தில் மணிகள் தொங்க விடுவது அவர்களின் பரம்பரை வழக்கம். பசுக்களின் நடமாட்டத்தின் போது மிக மென்மையான ஓசையை எழுப்பும் இந்த மணிகள், இந்நாட்டின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

    பனிமலை, பசுக்கள், வயல்வெளிகள், கிராமங்கள் என அனைத்து சுவிஸ் நாட்டின் அடையாளங்களும் கொண்டு சுமார் 4700 பேரை கொண்ட அந்நாட்டின் ஆர்வெஞ்சன் (Aarwangen) கிராமத்தில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல் வெளிநாட்டினர். அந்த கிராமத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், பல பசுமாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளிலிருந்து ஒன்றாக எழும்பும் ஓசை ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இரவு உறக்கத்தை கெடுப்பதாக கிராம சபையில் புகாரளித்தனர். இரவு வேளைகளில் மட்டும் மணிகளை கழட்டி வைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், "சுவிஸ் நாட்டின் தனித்தன்மை இந்த மென்மையான மணியோசை" என கூறி, கையெழுத்து இயக்கம் நடத்தி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் கையொப்பமிட்ட எதிர்ப்பு கிராம சபையில் அளிக்கப்பட்டது.

    பலமான எதிர்ப்பை கண்ட புகார் அளித்தவர்களில் ஒருவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்; மற்றொருவர் வேறு இடத்திற்கு இடம் மாறி விட்டார்.

    உலகெங்கும் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை பதுக்க சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகள்தான் முதல் புகலிடம் என நம்பப்படுகிறது. அந்த நாட்டில் ஒற்றுமையால் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைந்த சுவிஸ் பால் பண்ணையாளர்களின் மனஉறுதி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

    ×