search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu reservation"

    தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கடைபிடிக்கப்படும் 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012 முதல் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. 

    இதற்கிடையே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

    எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சில மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்த வழக்கை 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பிரதான வழக்குடன் இணைக்கலாமே என நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்தது. 

    இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் “பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோருவதை ஏற்க முடியாது. ஒரு கல்லூரியில் 100 இடங்கள் தான் இருக்கிறது என்றால் நாங்கள் எப்படி கூடுதல் இடம் ஒதுக்க கூற முடியும்?” என கூறி மேற்கண்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 
    ×