search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theatre marriage"

    சென்னை, தஞ்சாவூரில் பேட்ட படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மணமக்களை வாழ்த்தினர். #Petta #Viswasam
    சென்னை:

    ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் வெளியான நாளை தனது வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது என்று தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரசிகர் அன்பரசு விரும்பினார். தனது திருமணத்தையும் படம் ரிலீஸ் ஆன தியேட்டரிலேயே நடத்த முடிவு செய்தார்.

    இன்று காலை சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் தனது திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக அன்பரசு உறவினர்களுடன் அதிகாலையிலேயே தியேட்டருக்கு வந்தார். மணமகள் காமாட்சியை உறவினர்கள் அழைத்து வந்தனர்.

    ‘பேட்ட’ படம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மணமக்கள் திருமணத்துக்கு தயார் ஆனார்கள். தியேட்டரின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் உட்கார்ந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத மணமகன் அன்பரசு, மணமகள் காமாட்சி கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது, அங்கு கூடி இருந்த மணமக்களின் உறவினர்கள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்கள் வாழ்க என்று வாழ்த்து முழக்கமிட்டனர்.

    இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. பேட்ட படம் பார்க்க வந்த ரசிகர்களும் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.

    உட்லண்ட் தியேட்டரில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது.

    படம் தொடங்கியதும் புதுமண தம்பதியரும் ‘பேட்ட’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். ரஜினி நடிப்பை ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து ஆரவாரம் செய்தனர். மணமக்கள் வீட்டாரும், ரஜினி படத்தை பார்த்தனர்.

    ரஜினி படம் வெளியான அன்று அன்பரசு- காமாட்சி திருமணம் நடந்தது பெருமையாக இருக்கிறது. அவர்கள் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். இதை எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாது” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் ஜோதிராமன் (வயது 29). ரஜினி ரசிகரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்,

    இவருக்கும் ஒன்பத்துவேலியை சேர்ந்த உஷா ராணி(20) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படம் வெளியாகும் நாளில் தனது திருமணத்தை நடத்த ஜோதிராமன் விரும்பினார்.

    அதன்படி தஞ்சை சாந்தி தியேட்டரில் இன்று காலை 8 மணிக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் தலைமையில் மணமக்கள் ஜோதிராமன்- உஷாராணி திருமணம் நடந்தது. மங்கள வாத்தியம் முழங்க மணமகள் கழுத்தில் ஜோதிராமன் தாலி கட்டினார்.

    தஞ்சை சாந்தி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் மணமக்கள் ஜோதிராமன்- உஷாராணி ஆகியோருக்கு திருமணம் நடந்த போது எடுத்த படம்.

    அப்போது ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திருமண விழாவில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களாக பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த திருமணத்துக்கு 4 கிராம் தாலி உள்பட மொத்தம் ரூ.1½ லட்சம் செலவு செய்யப்பட்டது.

    பேட்ட படம் வெளியான அதே தியேட்டரில் உள்ள மற்றொரு அரங்கில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானது. இதனால் திருமண விழாவில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    பின்னர் மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து ஜூபிடர் தியேட்டர் முன்பு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தியேட்டரில் ‘பேட்ட’ படத்தை மணமக்கள், ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். #Petta #Viswasam

    ×