என் மலர்
நீங்கள் தேடியது "Theni land slide"
உத்தமபாளையம்:
தேனி அருகே சின்னமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஹைவேவிஸ் மலைப்பகுதி. இங்கு யானை, மான், முயல் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்த விழுந்தன.
இந்த நிலையில் மகாராஜா மெட்டு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் 1 வயது மதிக்கத் தக்க குட்டி ஆண் யானை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. எனவே வனப்பகுதியில் ஈரப்பதமாக காணப்படுகிறது. உணவு தேடி வந்த யானை திசை மாறி நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம். அப்போது வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துள்ளது.
வனப்பகுதியில் யானை உள்பட வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்கு பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இறந்த யானை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.