search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirtha Yatrai"

    • சக்திக்கு மீறி செய்யும் தானம் விஷத்திற்கு சமம்.
    • கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் கிடைக்காது.

    காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை.

    ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.

    காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு.


    ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.

    மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும்.

    அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.

    கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

    எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும்.

    சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.

    காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.

    ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:

    ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும்.

    இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது.

    ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்).


    மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது.

    வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து.

    ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.

    கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம்.

    பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.

    வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.

    விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.

    ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.

    அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

    பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது.

    தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம்.

    ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும்.

    தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.

    ×