search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai hills"

    • கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களைத் தவிர, சூரிய லிங்கம், சந்திர லிங்கம் உண்டு.
    • கோவிலை சுற்றி ஏராளமான சிறிய, பெரிய கோவில்களும் உண்டு.

    கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களைத் தவிர, சூரிய லிங்கம், சந்திர லிங்கம் உண்டு.

    இன்னும் ஏராளமான சிறிய, பெரிய கோவில்களும் உண்டு. அவை வருமாறு:

    1. உண்ணாமுலை அம்மன் கோவில்

    2. காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில்

    3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்)

    4. குமரபெருமான் கோவில் (அருணகிரிநாதரால் பாடப்பட்டது)

    5. காளியம்மன் கோவில்

    6. வனதுர்கை அம்மன் ஆலயம்

    7. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்

    8. திரவுபதி அம்மன் ஆலயம்

    9. ஆறுமுக சுவாமி ஆலயம்

    10. பராசக்தி ஆலயம் (பிருங்கி மகரிஷிக்குக் காட்சி தந்த இடம்)

    11. மகா நந்தி கோவில்

    12. ஐஸ்வரேஸ்வரர் கோவில்

    13. துர்வாச மகரிஷி கோவில்

    14. புற்று படவேட்டு அம்மன் ஆலயம்

    15. மகாசக்தி மாரியம்மன் கோவில்

    16. திருநேர் அண்ணாமலை, உண்ணாமுலை திருக்கோவில்கள்

    17. வீர ஆஞ்சனேயர் திருக்கோவில்

    18. ராகவேந்திரர் பிருந்தாவனம்

    19. பழனி ஆண்டவர் திருக்கோவில்

    20. ராஜராஜேஸ்வரி திருக்கோவில்

    21. வேடியப்பன் ஆலயம்

    22. கவுதம மகரிஷி திருக்கோவில்

    23. ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்

    24. மாணிக்க வாசகர் திருக்கோவில் (திருவெம்பாவை அருளிச் செய்த திருத்தலம்)

    25. மூகாம்பிகை அம்மன் ஆலயம்

    26. குபேர விநாயகர் திருக்கோவில்

    27. இடுக்குப் பிள்ளையார் கோவில்

    28. முத்துமாரியம்மன் ஆலயம்

    29. அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி திருக்கோவில்

    30. அம்மணி அம்மாள் திருக்கோவில்

    31. கெங்கையம்மன் திருக்கோவில்

    32. வடவீதி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

    33. துர்கை அம்மன் திருக்கோவில்

    34. பெரிய ஆஞ்சனேயர் ஆலயம்

    35. பூதநாராயணப் பெருமாள் ஆலயம்

    36. வீரபத்ரசுவாமி திருக்கோவில்

    37. இரட்டைப் பிள்ளையார் கோவில்.


    • மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார்.
    • தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

    பொதுவாக, ஆஞ்சநேயருக்குத்தான் செந்தூரம் பூசுவார்கள்.

    ஆனால் திருவண்ணாமலை கோவிலில் விநாயகருக்கு செந்தூரம் பூசி வழிபடுகிறார்கள்.

    இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.

    திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான்.

    இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள்.

    இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான்.

    அருணகிரிநாதர் சுவாமிகள் மக்கள் மத்தியில் புகழ் பெற்று வந்ததால் அவர் மீது அவனுக்கு கடும் ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டது.

    இதனால், ராஜாவிடம் சென்று அருணகிரி பற்றி புகார் கூறினான்.

    அருணகிரி ஏமாற்று பேர் வழி. அவரால் முருகனை வரவழைக்க முடியுமா? என்னால் காளியை வரவழைக்க முடியும்'' என்று சவால் விட்டான்.

    அருணகிரியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

    மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார்.

    ஆனால் முருகன் காட்சிக் கொடுக்கவில்லை.

    ஏன் என்று அவர் யோசித்த போது காளி தன் மகன் முருகனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதை ஞானத்திருஷ்டியால் அறிந்தார்.

    உடனே அருணகிரிநாதர், காளி மீது 4 பதிகங்களைப் பாடினார்.

    அதில் காளி மயங்கினாள். அவள் பிடி தளர்ந்தது.

    அவளிடம் இருந்து விடுபட்ட முருகப்பெருமான் கம்பத்தை உடைத்துக் கொண்டு வந்து காட்சி கொடுத்தார்.

    அதன்பிறகும் சம்மந்தாண்டான் அட்டூழியம் குறையவில்லை.

    இதையடுத்து விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார்.

    அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள்.

    இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார்.

    இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

    சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.

    தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

    • திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.
    • ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

    1. திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.

    2. திருவண்ணாமலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் செல்வதே மிகச்சிறப்பான கிரிவலமாகும்.

    3. திருவண்ணாமலை ஆலய சுற்றுச்சுவர் 30 அடி உயரம் கொண்டது.

    4. தல விருட்சமான மகிழ மரத்தின் அருகில் நின்று பார்த்தால் ஆலயத்தின் 9 கோபுரங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.

    5. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சிறு மண்டபம் அருகில் அமர்ந்து தியானம் செய்தால் எவ்வளவு பதற்றமான மனமும் அமைதி பெறும்.

    6. அண்ணாமலையாருக்கு திருப்பணி செய்தவர்களில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

    7. அண்ணாமலையார் ஜோதியாக இருந்ததை முழுமையாக உணர்ந்து திருமூலர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

    8. திருவண்ணாமலை ஆலய கருவறை வாசல் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சுமார் 10 அடி உயரத்துடன் உள்ளனர்.

    9. திருவண்ணாமலை பள்ளியறை சுவாமி, மேரு சக்கரம் என்றழைக்கப்படுகிறார்.

    10. இத்தலத்து அர்த்தநாரீஸ்வரர் ஆண்டுக்கு ஒரு தடவை வெளியில் வருவதுபோல 63 நாயன்மார்களும் ஆண்டுக்கு ஒரு தடவை வீதியுலா வருகிறார்கள்.

    11. திருக்கார்த்திகை தினத்தன்று மலைவாழ் மக்கள் திணை மாவில் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.

    12. உலகின் மிகப்பழமையான விழாவாக திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா கருதப்படுகிறது.

    13. மலைமேல் தீபம் ஏற்றக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் பர்வத ராஜ குலத்தவர்கள் ஆவார்கள்.

    இவர்களை நாட்டார்கள், செம்படவர்கள் என்றும் அழைக்கின்றனர்.

    14. ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

    சக ஆண்டு 1668ல் பிரதானி வெங்கடபதி ஐயன் என்பவர், நாலரை பாரம் எடையில்

    இந்த வெண்கலக் கொப்பரையை செய்து கொடுத்தார்.

    பின்பு தீபம் ஏற்ற இரும்புக் கொப்பரையே பயன்படுத்தப்பட்டது.

    இதன் விட்டம் 96 செ.மீ. கிட்டத்தட்ட மூன்றடி. உயரம் 145 செ.மீ.

    அடிபாகத்தின் சுற்றளவு 221 செ.மீ. விரிந்த மேற்பரப்பின் சுற்றளவு 280 செ.மீட்டர் ஆகும்.

    பிறகு 1991ம் ஆண்டு இக்கொப்பரை மாற்றப்பட்டு புதிய கொப்பரை வைக்கப்பட்டது.

    தற்போது 92 கிலோ செப்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களைக் கொண்டு புதுக்கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது.

    15. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலைவடிவில் காட்சியளிப்பதால் ஆலயத்தைச் சுற்றி வருவதைவிட

    மலையை சுற்றி வலம் வருவதுதான் மிகச்சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது.

    16. இறைவனாகிய திரு அண்ணாமலையை ஒருமுறை சுற்றி வந்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

    17. திருவண்ணாமலையில் ஒருநாள் உபவாசம் இருந்தால் அது பிற தலங்களில் நூறு நாள் உபவாசம் இருந்ததற்கு சமமாம்.

    18. கிரிவலம் வந்த பின்னர், அண்ணாமலையார் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள

    துர்வாச முனிவரை வணங்கி பின்னர் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மாளையும் தரிசித்தல் வேண்டும்.

    19. திருவண்ணாமலை கிரிவலத்தின் தனி சிறப்பு என்னவென்றால், இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும்

    பகலோ, இரவோ, அந்தியோ, சந்தியோ, வெயிலோ, மழையோ, எந்த நேரமும் யாராவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள்.

    20. திருவண்ணாமலையை 'மந்திர மலை' என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் மந்திர அட்சரங்களான 'நமசிவாய' என்ற எழுத்தினை நினைவுகூறும் முகமாக இம்மலையானது ஒன்று முதல் ஐந்து சிகரங்களை உடையதாக காட்சி தருகின்றது.

    • மிகப்பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், எப்போதும் விலைமாது வீடே கதி என்று கிடந்தார்.
    • முருகப்பெருமான் அவரை தம் கைகளில் ஏந்தி காப்பாற்றினார்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர்.

    மிகப்பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், சொகுசு பேர் வழியாக இருந்தார்.

    எப்போதும் விலைமாது வீடே கதி என்று கிடந்தார்.

    இதனால் செல்வம் எல்லாம் கரைந்தது.

    ஒரு கட்டத்தில் சகோதரி திருமணத்துக்காக வைத்திருந்த நகைகளையும் விற்று விலைமாதர்களிடம் செலவழித்து விட்டார்.

    தவறான பழக்கம் காரணமாக அவர் குஷ்ட நோயால் பிடிக்கப்பட்டார்.

    செல்வத்தையும் இழந்து, உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கிழே குதித்தார்.

    ஆனால் முருகப்பெருமான் அவரை தம் கைகளில் ஏந்தி காப்பாற்றினார்.

    அவரது குஷ்ட நோயை குணப்படுத்தி அருளிய முருகப்பெருமான், இனி தம்மை புகழ்ந்து பாடும்படி பணித்தார்.

    அருணகிரிநாதரின் நாக்கில் ''முத்தை தரு'' என்று எழுதி பதிகங்கள் பாட உத்தர விட்டார்.

    அதன் பிறகு அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனை புகழ்ந்து ஏராளமான பதிகங்கள் பாடினார்.

    இதனால் இத்தலம் முருகனின் புகழ்பாடும் தலமாகவும் அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி முருகப்பெருமானின் சிறப்பான சன்னதி இல்லை.

    அறுபடை வீடுகளில் நடக்கும் அனைத்து திருவிழாக்களும் இத்தலத்து முருகன் சன்னதியில் நடத்தப்படுகிறது.

    தைப்பூசத்தன்று பக்தர்கள் 1008 காவடி எடுத்து ஆடி வருவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதற்காக 1008 காவடிகளும் ஆண்டுதோறும் திருவண்ணாமலை தலத்திலேயே தயாரிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இப்படி காவடிகள் தயாரிக்கப்படுவதில்லை.

    • தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.
    • கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.

    தினமும் காலை, மாலை இரு நேரமும் அண்ணாமலையார் வாகனங்களில் வெவ்வேறு வடிவங்களில் வீதி உலா வருவார்.

    இந்த விழாவின் 8ம் நாளன்று அண்ணாமலையார் பிட்சாடனார் வேடம் ஏற்று யாசகம் கேட்க செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    பக்தர்கள் அன்று போட்டி போட்டு அவருக்கு பிச்சையை காணிக்கையாகப் போடுவார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள பல கடைக்காரர்கள் 8ந் திருநாளன்று வசூலாகும் மொத்த பணத்தையும்

    அண்ணாமலையார் எடுக்கும் யாசகத்துக்கு கொடுத்து விடுவார்கள்.

    கடவுளே வீதிக்கு வந்து பக்தனிடம் பிச்சை கேட்பது என்பது, தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,

    திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வாக உள்ளது.

    அண்ணாமலையார் யாசகம் கேட்பதை யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

    எனவே பெண் பக்தர்கள் அண்ணாமலையார் சார்பில் தங்கள் முந்தானையை ஏந்தி ஓடி, ஓடி சென்று பிச்சை எடுத்து வந்து அண்ணாமலையாரிடம் கொடுப்பார்கள்.

    குறிப்பாக நகரத்தார் பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து அண்ணாமலையாருக்காக தாங்களே பிச்சை எடுப்பதுண்டு.

    ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் இந்த அதிசயத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் தீப திருவிழாவின் 8ம் நாள் விழா தினத்தன்று சென்றால் பார்க்கலாம்.

    • இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.
    • ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    சிவாலயங்களில் தினமும் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் ஈசனையும் அம்பாளையும் பள்ளியறைக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு இருவருக்கும் சேர்த்து பள்ளியறை பூஜை நடத்தப்படும்.

    இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.

    பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறைக்கு முதலில் சிவபெருமான்தான் வருவார்.

    அவர் அம்பாள் வருகைக்காக காத்திருப்பார்.

    தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் இதுதான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இது மாறுபட்ட வகையில் உள்ளது.

    இங்கு பள்ளியறைக்கு முதலில் அம்பாள் வந்து விடுவாள்.

    அவள்தான் காத்துக் கொண்டிருப்பாள். அதன் பிறகே ஈசன் வருவார்.

    அம்பாளுக்கு அபிஷேகம் இல்லை

    திருவண்ணாமலை தலத்தில் தினமும் அர்த்தஜாம பூஜைக்கு முன்பு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள்.

    ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    தலைமுடி காய நேரமாகும் என்பதால் அம்பாளுக்கு இரவில் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.

    அதற்கு பதில் அம்பாளுக்கு தீபாராதனைக் காட்டுவது நடைமுறையில் இருக்கிறது.

    • இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.
    • இதன் காரணமாகவே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    சித்ரகுப்தர் சன்னதி

    தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாதபடி திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே சித்ரகுப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய 2 இடங்களில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.

    சித்திரை மாதம் இந்த சன்னதியில் சித்ரகுப்தருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்துகிறார்கள்.

    மலை ஏறியதற்காக பரிகார பூஜை

    திருவண்ணாமலையில் சிவபெருமான் மலை வடிவில் இருந்து அருள்பாலித்து வருவதாக ஒவ்வொரு பக்தரும் நம்புகிறார்கள்.

    எனவேதான் உலகில் உள்ள சுயம்பு லிங்கங்களில், இந்த மலை மிகப்பெரிய சுயம்பு லிங்கமாகக் கருதப்படுகிறது.

    லிங்கம் மீது யாராவது கால் பதித்து ஏறுவார்களா?

    இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    கார்த்திகை மாதம் தீப திருநாள் தினத்தன்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் அருகில் சென்று வழிபடுவதற்காக மலை ஏறுவதுண்டு.

    இந்த தீபம் மொத்தம் 11 நாட்கள் எரியும்.

    12வது நாள் தீபக் கொப்பரை கீழே கொண்டு வரப்படும்.

    அன்றைய தினம் அண்ணாமலையார் கோவிலில் இருந்து ஒரு கலசத்தில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.

    பக்தர்கள் பாதம்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் இருந்து தீர்த்தம் தெளித்து வருவார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிகாரப் பூஜை நடத்தப்படுகிறது.

    • மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம், அண்ணாமலையாராக கருதப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மட்டுமே இத்தகைய நடைமுறை உள்ளது.

    திருவண்ணாமலை கோவிலில் உள்ள மற்ற கடவுள் சன்னதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புக் கொண்டதாக திகழ்கின்றன.

    இத்தலத்து விநாயகர் ஆலயம் தான், விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் ஆலயத்தில் விநாயகர் தொடர்பான அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    ஒருநாள் நடை அடைக்கப்படும்

    திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்பட்டதும் அனைவரது கவனமும் தீபம் மீது திரும்பி விடும்.

    மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம், அண்ணாமலையாராக கருதப்படுகிறது.

    இதைக் கருத்தில் கொண்டு ஆலய கருவறையில் எந்த வழிபாட்டுக்கும் அனுமதி அளிக்க மாட்டார்கள்.

    மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட பிறகு உடனடியாக நடை அடைத்து விடுவார்கள்.

    அன்று முழுவதும் நடை திறக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மட்டுமே இத்தகைய நடைமுறை உள்ளது.

    • தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.
    • தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

    கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படுகிறது.

    இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளையும் மாடங்களையும் உடையது.

    மேற்குக் கோபுரம், பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

    மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.

    தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

    வடக்குக் கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

    வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள்.

    தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.

    தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.

    ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.

    • அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருவண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.
    • குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    நந்தி தேவரும், மார்க்கண்டேயரும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்த போது நந்திதேவர் திரு அண்ணாமலையை சிறந்த தலம் என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருஅண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.

    உடனே நந்திதேவர், "சிதம்பரத்தைக் கண்டால் முக்தி கிடைக்கும்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.

    இவை எல்லாவற்றையும் விட மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த இறைவனை மனதில் நினைத்தாலே

    இறைவன் உடனே வந்து அருள் தருவான்.

    எனவே திரு அண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.

    அதனால்தான் திருஅண்ணாமலையே சிறந்தது என்று கூறினேன்" என்று பதில் அளித்தார்.

    கரும்புத் தொட்டில்:

    அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.

    குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத் தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக் கொள்வார்கள்.

    இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    • பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.
    • ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.

    சித்த வைத்தியத்தில் இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக,

    பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவார் என்கிறார்கள்.

    இப்படி சொன்னால்தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பி சாப்பிடுவார்களாம்.

    மீனின் பெயர் செல்லாக்காசு:

    திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

    இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக் கொத்து.

    இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.

    அடேங்கப்பா இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால்,

    இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி! என்ற பதில் மட்டும்தான் கிடைக்கிறது.

    • திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
    • பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.

    திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.

    அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

    இது உலகிலேயே மிகப் பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

    முதல் கணக்கெடுப்பின் படி மலையின உயரம் 2665 அடி.

    போகர் செய்த சிலை

    அண்ணாமலையார் சந்நிதிக்கு நேராக மலையின் பின்புறம் உள்ள பகுதி, நேர் அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கே மண்டபம், கருவறை உண்டு. பின்னாக உண்ணாமலை அம்மை தீர்த்தமும் உண்டு.

    இங்குள்ள பழநி ஆண்டவர் சந்நிதியில் ஒரு மூலிகையிலான சிலை இருந்தது.

    பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.

    ஆனால் ரொம்ப காலத்துக்கு முன்பே இது களவாடப்பட்டு விட்டது.

    இங்கிருந்து பார்த்தால் மலையில் உள்ள கண்ணப்பர் கோவில் தெரியும்.

    ×