என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruvathikai"
- ஆண்டுக்கு 12 தடவை சுவாமி வீதியுலா நடக்கிறது.
- நவக்கிரக அமைப்புகள் வித்தியாசமானது. ராகுவும், கேதுவும் இங்கு மாறுபட்ட விதமாக உள்ளனர்.
1. இத்தலத்துக்கு திருவதிகை என்ற பெயர் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. சேர மன்னர்களின் ஒரு பிரிவினர் அல்லது சமண முனிவர் யாராவது பெயரால் இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராயச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
2. திருவாதிரை தினத்தன்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து 100 பொற்காசுகள் கொடுத்த நரசிங்க முனையார் என்ற சிற்றரசர் திருவதிகையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.
3. அதியமானோடு தொடர்புடைய இந்த பகுதி அதிகனூர் என்று அழைக்கப்பட்டு பிறகு அதிகை என மருவி இருக்கலாம் என்று தமிழறிஞர் ரா.பி.சேதுபிள்ளை கூறியுள்ளார்.
4. மூன்று அரக்கர்களை இங்கு சிவன் எரித்ததால் முதலில் இந்த ஊர் `திரிபுரவதம்' என்றழைக்கப்பட்டது. அது திரிபுரவதிகை என்று மாறி பின்னர் திருவதிகை ஆகி இருக்கிறது.
5. முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னி லங்கையில்
அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே
யானுமிட்ட தீ முள்க மூள்கவே - என்று பட்டினத்தார் பாடியதன் மூலம் திரிபுரம் எரித்தது ராமாயண காலத்துக்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.
6. திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை, வாரணாசி ஆறு என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
7. பரமனின் முடியை கண்டதாக தாழம்பூ உதவியுடன் பொய் சொன்னதால் சாபத்துக்குள்ளான பிரம்மன், திருவதிகையில் நான்முகலிங்கம் நிறுவி வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்டார்.
8. பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திருமூலர் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெற்றுள்ளனர்.
9. தமிழ்நாட்டில் உள்ள வேத காலத்துக்கும் முற்பட்ட சில தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
10. இத்தலத்தில் ஆண்டுக்கு 12 தடவை சுவாமி வீதியுலா நடக்கிறது.
11. இத்தலத்தில் ஒரு தடவை திருப்பணி நடந்த போது கொடி மரம் அருகே பூமிக்குள் புதைந்து கிடந்த வராகி சிலை கிடைத்தது. அதை அந்த இடத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள். தஞ்சை கோவிலிலும் இப்படி ஒரு வராகி சிலை உள்ளது. தமிழ் மன்னவர்கள் போருக்கு புறப்படும் முன்பு வராகியை வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.
12. அசுரர்களை அழித்தாலும் இந்த தலம் சாந்தமான தலம் என்று பெயரெடுத்துள்ளது. அது போல இத்தலம் பரிகாரம் தலம் அல்ல, பிரார்த்தனை தலமாகும்.
13. இத்தலத்தில் காரணம் ஆகம விதிப்படி நித்தியப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
14. இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.
15. இத்தலத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கான வாகனங்கள் வெள்ளியால் செய்யப்பட்டவைகளாகும். வெள்ளியால் ஆன ரிஷபம், மயில் ஆகியவற்றை பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
16. இத்தலத்தில் நீண்ட நாள் வாழ்ந்த திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு திரும்பி வந்தார் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இத்தல பிரகாரத்தில் சமணர் சிலை ஒன்று உள்ளது.
17. இத்தலத்தில் மொத்தம் 16 உற்சவர்கள் உள்ளனர். ஆனால் திரிபுரந்தகர் பிரதான உற்சவராக உள்ளார்.
18. திருவதிகை கோவில் உள்ளே ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கப்பாதை இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி தலங்களுக்கு செல்வதாக சொல்கிறார்கள்.
19. காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் பூமிக்கு அடியில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். அதே போன்று திருவதிகை தலத்திலும் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
20. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் புகழ் பெற்றிருப்பது போல இந்த தலத்தில் `திரிபுர ரகசியம்' கூறப்படுகிறது. அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விரட்டுவதை இந்த திரிபுர ரகசியம் உணர்த்துவதாக அர்த்தம். ஆனால் ஏனோ தெரியவில்லை திரிபுர ரகசியம் என்பது கால ஓட்டத்தில் மறைந்து போய் விட்டது.
21. இத்தலத்துக்கு தல விருட்சமான சரக் கொன்றை மரம் பட்சி வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
22. தல விருட்சமான சரக் கொன்றை மரத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
23. இத்தலத்துக்கு சக்கரகுளம், சூலை நோய் தீர்த்த கிணறு, கெடில நதி மூன்றும் தீர்த்தமாக உள்ளன. இதில் சூலை கிணற்று நீர் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
24. தீர்த்தங்களில் ஒன்றான சக்கர தீர்த்தம் அக்னி மூலையில் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
25. இத்தலத்தில் உள்ள நவக்கிரக அமைப்புகளும் வித்தியாசமானது. ராகுவும், கேதுவும் மாறுபட்ட விதமாக உள்ளனர்.
26. தினமும் மாலை 5.30 மணிக்கு இத்தலத்து சூரியன் மீது சூரிய கதிர்கள் விழுவதை பார்க்கலாம். இதன் மூலம் சூரிய பகவான் தினமும் தன்னைத்தானே இத்தலத்தில் வழிபடுவதாக கூறப்படுகிறது.
27. இங்குள்ள நடராஜர் விரி சடை இல்லாதவர் ஆவார்.
28. இத்தலத்தில் பல திருப்பணிகளை செய்ததன் மூலம், `திருப்பணி செம்மல்' என்ற சிறப்பை பண்ருட்டி நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் பெற்றுள்ளார். அவரது முயற்சியால் திருவதிகை தலத்தில் கடந்த 1.6.2012 அன்று மகா குட முழுக்கு நடைபெற்றது.
29. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் இத்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் இருந்ததாக சொல்கிறார்கள்.
30. இத்தலத்தின் பூமிக்கு அடியில் மிகப் பிரமாண்டமான சரக்கொன்றை நாதர் லிங்கம் கிடைத்தது. இந்த லிங்கத்துக்கு மாதந்தோறும் சிவராத்திரி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
31. திருவதிகை கோவில் முகப்பு வாசலில் நாட்டிய மரபுடன் தொடர்புடைய 108 கரணங்களை விற்கும் சிற்பங்கள் உள்ளன.
32. திருவதிகை திருத்தலம் சென்னையில் இருந்து 175 கி.மீ, விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ, கடலூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
33. `உண்மை விளக்கம்' என்னும் ஞான சாத்திர நூலை எழுதிய மனவாசகங்கடந்தார் திருவதிகையில்தான் பிறந்தார். இவரது உருவச்சிலை பெரிய நாயகி சம்மன் நுழைவுப் பகுதியில் இடது பக்க ஓரத்தில் உள்ளது.
34. திருஞான சம்பந்தருக்கு இத்தலத்தில்தான் ஈசன் தன் அனைத்துப் படையுனருடன் வந்து திரு நடனம் காட்டினார்.
35. இத்தலத்தின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள பஞ்சலிங்கம் அனைவரும் அவசியம் காண வேண்டிய ஒன்றாகும். வேறு எங்கும் இத்தகைய லிங்கத்தை பார்க்க முடியாது.
36. கோவில் முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. இம்மண்டப தூண்களில் ரிஷபாடேர், அப்பர், மயில்வாகனன் மற்றும் திருப்பணிச் செய்த செட்டியார்களின் சிலைகள் உள்ளன.
37. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் இக்கோவிலை திருத்தி மிகப் பெரிய திருப்பணி செய்தார். அவருடைய சீடர் சிவஞான தம்பிரான் முதன் முதலில் திருநாவுக்கரசருக்கு 10 நாள் உற்சவம் எடுத்தார்.
38. மணவிற் கூத்தனான சாலிங்கராயன் என்பவன் இக்கோவிலுக்கு பொன்வேய்ந்து கொடுத்தான். நூற்றுக்கால் மண்டபம், மடப்பள்ளி, அம்பாள் சன்னதி ஆகியவற்றையும் இவன்தான் கட்டியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது.
39. தன் வாழ்நாள் முழுவதும் இத்தலத்திலேயே இருந்தவர் திலகவதி அம்மையார். இவரது நிகரற்ற சிவத்தொண்டை போற்றும் வகையில் கொடி மரம் அருகே திலகவதி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது.
40. திருநாவுக்கரசருக்கும் இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. அமர்ந்த நிலையில் சிரித்த முகத்துடன் அவர் உள்ளார். அவர் கைகளில் உழவாரப்படை தாங்கியதை காணலாம்.
41. சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 218வது தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
42. அட்ட வீரட்ட தலங்களில் அதிகப் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு.
43. திருமால் எடுத்த மோகினி அவதாரம் இத்தலத்து ஈசனை வழிபட்ட பிறகே நீங்கியது.
44. இந்திரன், சப்த ரிஷிகள், வாயு, வருணன், எம தர்மன் ஆகியோரும் இத்தலத்து ஈசனை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.
45. இத்தலத்தின் 100 கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் திருமணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
46. இத்தலத்தில் இரு கோபுரங்கள் உள்ளன. முதல் கோபுரம் 7 நிலைகளுடன் 110 அடி உயரம் கொண்டது. உள்ளே இருக்கும் 5 நிலை கோபுரம் 1935ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 1940ல் முடிக்கப்பட்டது.
47. எல்லா ஊர்களையும் விட இந்த ஊருக்கு அதிக ஈசன் அருள் கிடைத்ததால் இந்த ஊருக்கு ''திருவதிகை'' என்ற பெயர் ஏற்பட்டது.
48. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் ''அதியரைய மங்கலம்'' என்று அழைக்கப்பட்டது.
49. முதலாம் ராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராச மங்கலம்'' என்று பெயர் பெற்றது.
50. முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராமங்கலியபுரம்'' என்று பெயர் மாறியது.
51. விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் ''திருவதிகை நாடு'' என்ற பெயரில் இந்த ஊர் ஒரு சிற்றரரசரின் தலை நகரமாக இருந்தது.
52. சேர மன்னர்களில் ஒரு பிரிவினர் ''அதிராசர்'' என்றழைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மன்னர்தான் இந்த கோவிலை கட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
53. திருநாவுக்கரசர் இத்தலத்தில் 16 தேவார திருப்பதிகங்கள் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர் இருவரும் தலா ஒரு பதிகம் பாடி உள்ளனர். ஒரு பத்கம் என்பது 10 பாடல்களைக் கொண்டது.
54. சீர்காழி (71) திருவாரூர் (33) தலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக தேவார பாடல்கள் பெற்ற மூன்றாவது திருத்தலமாக திருவதிகை தலம் உள்ளது.
55. புறநானூறு, கலித் தொகை ஆகிய சங்க கால நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் திருவதிகையில் சிவபெருமான் முப்புரம் எரித்த வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது.
56. சிவபெருமான் தன் சிரிப்பால் முப்புரத்தையும் எரித்து அழித்த சம்பவம் தில்லைக் கலம்பகப் பாடல்களில் இனிமையாகக் காட்டப்பட்டுள்ளது.
57. மாணிக்க வாசகர் இத்தலத்துக்கு வந்து பதிகம் எதுவும் பாடி பதிவு செய்யவில்லை. என்றாலும் சிவபெருமான் முப்புரம் அழித்ததை புகழ்ந்து பாடியுள்ளார்.
58. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் வில் ஏந்திய கோலத்தில் இருந்தார். அதே கோலத்தில் ஈசனை திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி, தஞ்சை பெரிய கோவில் ஆகிய கோவில்களிலும் தரிசிக்கலாம்.
59. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் உக்கிரம் கொண்டு ஆடினார். அந்த ஆடலுக்கு கொடுகொட்டி, பாண்டரங்கம் என்று பெயராகும்.
60. சுவாமி வீரட்டானேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் காட்சியளிப்பது போல கோவில் தூண்கள் முழுவதும் 16 பட்டைகளுடன் விளங்கிறது.
61. இத்திருக்கோவிலில் பூமியில் நிழல் விழாதபடி கணித முறைப்படி கர்ப்பகிரக விமானம் கட்டப்பட்டுள்ளது.
62. திருநாவுக்கரசர் இத்தலத்தில் பாடிய தேவார பாடல்களின் பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்ஹார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது.
63. சிவபெருமான் தேரில் வந்ததால் இத்திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
64. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும்.
65. இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
66. அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக நடக்கும்.
67. தீராத வயிற்றுவலி இத்திருக்கோவிலில் திருநீறும், சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக நோய் தீர்ந்துவிடும்.
68. குழந்தை «பறு இல்லாதவர்கள் அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்தப் பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.
69. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவோருக்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி.
70. மாதந்தோறும் பவுர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
71. திருக்கோவில் ராஜகோபுர வாசலில் 108 நாட்டியங்களை விளங்கும் சின்முத்திரையுடன் கூடிய சிற்பங்களை கருங்கற்கலால் செதுக்கப்பட்டுள்ளது.
72. 63 நாயன்மார்களின் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
73. திருவாதிரை அன்று சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களில் ஸ்ரீபைரவர் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
74. ஞாயிறு அன்று ஐந்தெழுத்து வேள்வி நடத்தபடுகிறது.
75. திங்கட்கிழமை சோமாவார வழிபாடு நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்