search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Health Ministry"

    • மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதையும், தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
    • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் தெரிவித்தல் அவசியம்.

    சென்னை:

    கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

    மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் நாள்தோறும் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்காக வருவோரின் விவரங்களைத் திரட்டி அதுகுறித்து கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியம்.

    குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து வினியோகித்தல், ஏடிஸ் வகை லார்வாக்களை ஒழித்தல், டயர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருள்களை அகற்றுதல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் என அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோன்று, ஏதேனும் ஒரு இடத்தில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் அங்கு மருத்துவ முகாம்களை நடத்துதல் வேண்டும். அப்பணிகளில் கிராமப்புற சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்தலாம். அதற்கான ஒத்துழைப்பை உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.

    இதைத் தவிர, மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதையும், தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான ஆய்வை முன்னெடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் தெரிவித்தல் அவசியம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×