search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist exhibition"

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×