search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uchishta Ganapathy Kovil"

    • சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள்.
    • மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள்.

    சோழவள நாட்டில் பொன்னிமா நதியின் வடபால் ஸ்ரீ மஹாகணபதி க்ஷேத்திரங்களில் ஒன்றாய் அவரது திருநாமத்தாலேயே விளங்குவது கணபதி அக்ரஹாரம்.

    கணபதி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பாகவும், பழமையாகவும் மிகுந்த அருளோடு விளங்குவதும் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆன பெருமை உடையது. பின் ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை "அண்ணகோஷஸ்தலம்" என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    ஒரு சமயம் அகஸ்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் "சல சல" என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம் அவரை கோபம் அடைய செய்து அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட சோழதேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகஸ்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத்தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

    மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் அபிஷேக ஆராதனையும் மாலையில் சுவாமி புறப்பாடும் தேய்பிறை சதுர்த்தியில் "சங்கடஹர சதுர்த்தியில்" பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற விரதம் இருந்து அன்று இரவு வருவார்கள். பூஜையில் கலந்து கொண்டு பின் இல்லம் செல்வார்கள்.

    சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள். மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள். மேலும் இவ்வூரில் மிகவும் சிறப்பாக போற்றப்படுவதும் கொண்டாடபடுவதும் ஆன விநாயக சதுர்த்தியை மற்ற ஊர்களில் போல் தத்தம் இல்லங்களில் மண்ணினால் ஆன விக்கிரகத்தை வைத்து வழிபாடு செய்யாமல் அவ்வூர் மக்கள் அனைவரும் விநாயக ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள்.

    இத்திருத்தலத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் முன்னதாகவே கொடியேற்றம் நடைபெறும். கொடி ஏற்றத்தின்போது பக்தர்கள் அவர்கள் குறை போக்க தாங்கள் உடுத்தும் சட்டைத்துணியும், துண்டு வஸ்திரத்தை புதிதாக வாங்கி மஞ்சள் காசுடன் சேர்த்து விநாயக பெருமான் கோவிலில் சேர்த்து விடுவார்கள். அப்பொருட்களை சிவாச்சாரியார் பெற்று கொண்டு கொடியேற்றத்துடன் இவைகளையும் கொடிமரத்தில் ஏற்றி பின் கொடி இறக்கம் செய்யும் காலத்தில் பக்தர்கள் பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    கொடியேற்றம் நடைபெற்ற பின் காலை, மாலைகளில் விநாயகர் பல்வேறு விமானங்களில் வீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாள் விநாயகரை தேர் உலா நடைபெற்று விநாயக சதுர்த்தி அன்று மஹா அபிஷேகம் நடைபெற்று விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பாடு செய்து யாகசாலையில் எழுந்தருளச் செய்து பொறிதூவி வழிபாடு செய்து திருவீதி உலா, மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று பின் பதினெட்டு காலம் பூஜிக்க பட்ட கலசத்துடன் ஆலயத்தை வலம் வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் அன்னதானம் நடைபெற்று இரவில் கொடி இறக்கம் நடைபெறும். மறுநாள் சப்தவரணம் என்கிற நிகழ்ச்சியாக ஏழுமுறை ஆலயத்தை வலம் வந்து ஒவ்வொரு முறையும் வலம் வரும் நிகழ்ச்சியாக வேத கோஷம், நாட்டியம், சங்கீதம், மௌனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மாலையில் கண்ணாடி பல்லக்கு திருவீதி உலா நடைபெறும்.

    அதன்பின் மஞ்சள் நீர் விளையாட்டு, பந்தல் காட்சிகள், ஊஞ்சல் சேவை என்று தண்டிகேஸ்வரர் உற்சவமும் மறுநாள் விடையாற்றி விழாவாக விநாயகருக்கு ஆஸ்தான பிரவேசம் நடைபெறும்.

    இவ்வாலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வரும் மனம் படைத்தவராகவும் அருள் பெற்றவராகவும் காணமுடிகிறது. நாம் அனைவரும் சென்று முருகனுக்கு மூத்தவரை முக்கண் மகன் கணபதியை வழிபட்டு வாழ்வில் சகல நலன்கள் பெறுவோமாக!

    • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
    • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

    தேவையான பொருள்கள்:

    கொழுக்கட்டை சொப்பு செய்ய:

    பச்சரிசி – 1 கப்

    தண்ணீர் – 2 1/2 கப்

    உப்பு – 1 சிட்டிகை

    நல்லெண்ணெய்

    பூரணம் செய்ய:

    தேங்காய்த் துருவல் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலப்பொடி

    செய்முறை:

    சொப்பு:

    முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)

    வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.

    மாவு சேர்த்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

    பூரணம்:

    வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும். தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

    கொழுக்கட்டை:

    ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.

    எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம். செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

    * அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் (இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

    * சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

    * மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

    * சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

    * மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

    * பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

    * தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

    * தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக்கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

    * அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

    • ஜோடியாக வீற்றிருக்கும் ‘உச்சிஷ்ட விநாயகரை’ வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும்.
    • செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் நைவேத்தியம் செய்கிறார்கள்.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் 'உச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். 'உச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், 'மூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார். பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி" என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார்.

    இவரது பெயரில் 'ஸ்ரீ' என்பது லட்சுமியையும், 'நீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் 'வாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது.

    இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் 'உச்சிஷ்ட விநாயகரை' வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும். தாம்பத்திய உறவு மேம்படும் என்கிறார்கள்.

    குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம். அதோடு, செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில், பை-பாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம்.

    ×