search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urthuvapathar"

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    ×