search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vastu Meditation"

    • நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு.
    • வாஸ்து பகவானை பூஜிக்காமல் ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல.

    நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு. அப்படி வீடு, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களைக் கட்டும் முன்பாக, வாஸ்து பகவானை வழிபட்டு, பின்னர் அந்தப் பணிகளைத் தொடர வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு வருடத்தில் எட்டு மாதங்களில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து பகவான் கண் விழிக்கின்றார். மற்ற அனைத்து நாட்களும் அவர் நித்திரையில் இருக்கிறார். வாஸ்து பகவானை பூஜிக்காமல், அடிப்படையான ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல என்கிறார்கள். அத்தகைய சிறப்புக்குரிய வாஸ்து பகவானைப் பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் என்ற அசுரனுடன் பெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார், சிவபெருமான். அப்போது சிவனின் உக்கிரமான வடிவத்தில் இருந்து வெளிப்பட்ட வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தது. அதில் இருந்து தோன்றிய மிகப்பெரிய பூதம் ஒன்று, மிகுந்த பசியுடன் மூன்று உலகங்களையும் விழுங்கக்கூடியதாக இருந்தது. அதைப்பார்த்த சிவபெருமான், "அந்தகாசுரனின் உதிரத்தை உண்டு, உன் பசியை போக்கிக்கொள்" என்று அந்த பூதத்திடம் கூறி மறைந்தார்.

    அதன்படியே செய்த பூதம், அந்தகாசுரன் அழிந்த பிறகு, கடுமையான தவத்தை மேற்கொண்டது. அந்த தவத்தைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள்.

    திருக்கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் மாய அஸ்திரங்களை அனுப்பி அந்த பூதத்தை பூமியில் விழும்படி செய்தார். அப்போதும் அந்த பூதம் தன் வலிமையால், மேலே எழ முயற்சி செய்தது. அப்போது அந்த பூதத்தின் மீது தேவர்கள் பலரும் அமர்ந்தனர். அதன் காரணமாக பூதம் அடங்கியது. மேலும் தேவர்கள் அமர்ந்த காரணத்தால் அந்த பூதம் புனிதமானது.

    அந்த பூதத்திற்கு `வாஸ்து' என்ற பெயர் உண்டானது. இன்னும் சிலர், இந்த பூதம் அழிந்த பின், அதனை அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

    முன்பு ஒரு யுகத்தில் மலைகளுக்கு இறகுகள் இருந்ததாம். இறகுகளைக் கொண்ட மலைகள், பறந்து பறந்து பின் பூமியில் இறங்கி பூமியை அதிர்வுக்குள்ளாக்கியும், சேதப்படுத்தியும் தொல்லை கொடுத்தன.

    இதனால் இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு, மலைகளின் இறகுகளை அறுத்து எறிந்தான். இதனால் பறக்க முடியாத மலைகள், குளிகன், மகாபத்மன், பத்மன், கார்கோடகன், ஆனந்தன், தட்சன், சங்கன், வாசுகி போன்ற பல நாகங்களின் மீது விழுந்து அழுத்தின. இதனால் பாரம் தாங்காமல் அந்த நாகங்கள் கக்கிய விஷத்தில் இருந்து வாஸ்து தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. வாஸ்து பகவானை `பூமி புத்திரன்' என்றும் அழைப்பார்கள்.

    வாஸ்து பூஜை செய்யும் முறை

    வாஸ்து பகவான் நித்திரையை விட்டு கண் விழிக்கும் நாளில்தான் இந்தப் பூஜையை செய்ய வேண்டும். வீடு கட்டுபவர்கள், வீடு கட்டுவதற்கான ஆரம்ப பூஜை (கிரக ஆரம்பம்) செய்வதற்கு முன்பாக, இந்த வாஸ்து பூஜையை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக, செவ்வாய், சனிக்கிழமைகள் தவிர்த்து சுபவேளையில் மனை தேர்வு செய்த பின் வீடு கட்டத் திட்டமிடலாம். பூமியை தேர்ந்தெடுத்த பின் 'பூ பரிகஷா' என்ற மனை பரிசோதனை செய்தல் நல்லது. ஒரு அடி அகல நீள ஆழம் உள்ள குழி தோண்டி நீர் விட்டு, அதில் வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களைப் போட்டு பரிசோதிக்க வேண்டும். மனை பூஜைக்கு முன் வாஸ்து பூஜை செய்தல் அவசியம்.

    வாஸ்து புருஷனை பூஜித்து விட்டு, அதன்பின்னர் வீடு அல்லது தொழிற்சாலைகளை கட்டலாம். மனையின் தென்கிழக்கு பாகத்தில் நான்கு செங்கல்களை தேர்ந்தெடுத்து, அதற்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பின்னர் அந்த செங்கல்களை கிழக்கு மேற்காக வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் ஆவாஹனம் செய்து ஷோடச உபசாரம் செய்து பூஜிக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது செங்கற்களை கிழக்கு மேற்காக வைத்து, நவக்கிரகங்களை அதில் ஆவாஹனம் செய்து அபிஷேக, ஆராதனை செய்து பூஜிக்க வேண்டும்.

    செங்கற்களை நான்கு, மூன்று, இரண்டு என்ற வரிசையில் வைத்தல் வேண்டும். பூஜைக்கு வாசனை மலர்களைப் பயன்படுத்த வேண்டும். எந்தப் பூஜையும் விநாயகரை ஆராதனை செய்த பின் செய்வது உத்தமம் என்பதால், விநாயகரை பூஜித்தே வாஸ்து பூஜையை செய்ய வேண்டும். மேலும் வாஸ்து பூஜை செய்யும் நாளில் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் நன்மை தரும்.

    முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் வைத்து மலர் சரம் சாற்ற வேண்டும். அப்போது 'ஓம் வக்ர துண்டம் ஆவாஹயாமி', 'ஓம் விக்னராஜம் ஆவாஹயாமி', 'ஓம் கஜானனம் ஆவாஹயாமி', 'ஓம் ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி' ஆகிய நான்கு நாமங்களை ஆவாஹனம் செய்து, அருகம்புல் மாலை சூட்டி, விநாயகரின் ஷோடச நாமங்களால் அவரை அர்ச்சித்து விக்னங்களும், அந்த மனையில் உள்ள சகல பூத, பிரேத, பிசாசுகளும் விலகவும், அதே இடத்தில் லட்சுமி தேவியின் வாசம் ஏற்படவும், குடும்ப விருத்தி ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின் வாஸ்து புருஷனை, 'ஓம் பூ: வாஸ்து புருஷம் ஆவாஹயாமி', 'ஓம் புவ: மஹாகாயம் ஆவாஹயாமி', 'ஓம் ஸுவ: க்ருஷ்ணாங்கம் ஆவாஹயாமி', 'ஓம் பூர்புவஸ்ஸுவ: ரக்தலோசநம் ஆவாஹயாமி' என்ற நாமங்களை ஆவாஹனம் செய்து, பின் வீடுகட்ட ஆரம்பிக்கும் இடத்தில் 'ஆத்யேஷ்ட காத்யாஸம்' என்றபடி 9 கற்களை வைத்து, நான்கு திசையில் நான்கு கற்களையும் வைத்து பந்தனம் செய்து, பின் எட்டு திக்குகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான தேவர்களுக்கு பூசணிக்காய் பலி சேர்க்க வேண்டும்.

    கோவிலாக இருந்தால் 'மூர்தேஷ்ட காத்யாஸம்' என்றபடி கடைசி கல் பிரம்மா பாதத்தில் வைக்க வேண்டும். ஆத்யேஷ்ட காத்யாசம் செய்யும் முன் 'ரத்ஷையாசம்' என்றபடி நவமணிகள் என அழைக்கப்படும், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம் வைடூர்யம், மாணிக்கம் முதலியவற்றை வைக்கவும். அதோடு நவதானியங்களை, சுமங்கலி பெண்களைக் கொண்டு சேர்ப்பது விசேஷமானது.

    மேலும் செப்பு, வெள்ளி தகட்டில் ஷட்கோணமும், நடுவில் வாஸ்து மூல எழுத்தும், வட்டமும் வரைந்து, அதன் மேல் அஷ்ட தளம் எழுதி, இந்திரன் முதல் ஈசானன் வரை எழுதி, நான்கு பக்கத்திலும் நான்கு வாஸ்து பிரதான நாமங்களை எழுதி பூஜித்து வாஸ்து யந்திர ஸ்தாபனமும் செய்யலாம்.

    இந்த வருடத்தில் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), (மாசி மாதம் 22-ந் தேதி) காலை 8 நாழிகைக்கு வாஸ்து புருஷன் கண் விழிக்கிறார். இந்த நாளில் வீடு கட்டுபவர்கள், அதற்கான பூஜையை செய்யலாம். வருகிற 5-ந் தேதி காலை 10.06 மணிக்கு மேல் 10.42 மணிக்குள் வாஸ்து பூஜை செய்வது விசேஷ நன்மைகளை தரும். (இது சூரிய உதயத்தில் இருந்து அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.)

    இதில் எமகண்டம் ஒன்பது மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், 'அந்த நேரத்தில் செய்ய வேண்டாம்' என்று நினைப்பவர்கள், 10.30 மணிக்கு மேல் ஆரம்பித்து செய்யலாம். பொதுவாக வாஸ்து பூஜைக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தால் போதும்.

    செவ்வாய்க்கிழமை, சனிக் கிழமை, அஷ்டமி, நவமி, மரண யோக தோஷங்கள் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கிரக ஆரம்பத்திற்கு இவை அனைத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    விசேஷ வாஸ்து தியானம்

    வாஸ்து புருஷோ மஹா காயோ க்ருஷ்ணாங்கோ

    ரக்த லோசந ரக்தாநநோ த்விபாஹூச்ச

    பப்பருவாஹ பராங்க்க:

    ஸயாநம் நீலதிக் பாதமை சாந்யே ந்யஸ்த மஸ்தக:

    என்ற மந்திரத்தை உச்சரித்து வாஸ்து பகவானை தியானிக்க வேண்டும். அவரை தியானிப்பது சகல நன்மைகளையும் கொடுக்கும். மேலும் வன்னி, வில்வம், அரசு, ஆல், அத்தி, புரசை, கருங்காலி ஆகிய ஏழு சமித்துக்கள் வாஸ்து ஹோமத்திற்கு விசேஷமானவை ஆகும். வாஸ்து பகவானுக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. மனையில் சங்கு ஸ்தாபனம் செய்து ஸல்லியம் பார்ப்பது போன்றவையும் மிகவும் விசேஷமானது.

    'வாஸ்து புருஷத்யாம்நம்:-

    வாஸ்து புருஷோ மஹாகாயோ க்ருஷ்ணாங்கேர ரக்தலோசந:

    ஏகாந நோ த்விபாஹுஸ்ச பப் ருவாஹ:

    பராங்கக: ஸயாநம் நீலதிக்பாதம் ஐஸாந்யே ந்யஸ்த மஸ்தக:

    குதாஞ்ஜலி புடோ த்யாயேத் பஸம்வத் இஷ்டார்த்த ஸித்தே யே!'

    என்பது, திருவல்லிக்கேணி, திருப்பதி போன்ற ஆலயங்களில் சொல்லப்படும் வாஸ்து தியானம் ஆகும்.

    ×