search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VC Chellathurai"

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. #MKU #PPChellathurai
    புதுடெல்லி:

    மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.



    அந்த மனுக்களில், ‘பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதமானது. தற்போது, அவர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவர் புதிதாக பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கவேண்டும். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்ட நியமனத்தை ரத்து செய்து கடந்த ஜூன் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கினர்.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஜீர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வக்கீல் ஆர்.வெங்கட்ரமணி, அரசு வக்கீல் பா.வினோத் கன்னா ஆகியோர் தங்களுடைய வாதத்தில், “சென்னை ஐகோர்ட்டு செல்லத்துரையின் நியமனத்தை செல்லாது என்று கூறி ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 3 மாதத்துக்குள் புதிய துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் கடந்த 16-ந் தேதியன்று புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் வகையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி விட்டன. புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அக்குழு பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும். எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

    மனுதாரர் செல்லத்துரை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில் “ஐகோர்ட்டு கடந்த 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. 16-ந் தேதியன்று ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அன்றே அதிகாரிகளைக்கொண்டு வழக்கத்தில் என்றும் இல்லாதபடி அவசர அவசரமாக குழுவை அமைத்துள்ளனர். இது மனுதாரருக்கு எதிராக உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும்” என்றார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில், ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுதாரரின் மனுவின் மீது பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.   #MKU #PPChellathurai #tamilnews
    ×