என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vishnu temple"
- ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
- தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.
* திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.
* கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
* திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.
* கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.
* தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.
தல வரலாறு :
மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.
அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.
உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.
கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.
மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.
புராணக் கதை :
சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.
கோவில் அமைப்பு :
இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.
கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.
திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.
இது தவிர தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயத்தின் சிறப்புகள் :
* இக்கோவில் 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
* நம்மாழ்வார் இத்தல இறைவனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.
* பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது.
அஞ்சம்பலம் :
மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர்.
அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலையும், பீமன் - திருப்புலியூர் மாயபிரான் கோவிலையும், அர்ச்சுனன் - திருவாரண்விளை பார்த்தசாரதி கோவிலையும், நகுலன் - திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவிலையும், சகாதேவன் - திருக்கடித் தானம் (திருக்கொடித்தானம்) அற்புத நாராயணர் கோவிலையும் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி பெற்றனர். பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஐந்து கோவில்களும் கேரளாவில் ‘அஞ்சம்பலம்’ எனப்படுகின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர், கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர், கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர், திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரெயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன.
தல வரலாறு :
நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான்.
அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.
பிற்காலத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக இப்பகுதிக்கு வந்தனர். அங்கே, அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் வியூகத் தோற்றம் தெரிந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த பஞ்சபாண்டவர்கள் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். அங்கு முதலில், அர்ச்சுனன் ஒரு மகாவிஷ்ணு சிலையினை நிறுவி வழிபட்டான். அவனைத் தொடர்ந்து, தருமர், பீமன் ஆகியோர் தனித்தனியே விஷ்ணு சிலைகளை நிறுவ, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சேர்ந்து ஒரு விஷ்ணு சிலையை நிறுவி வழிபட்டனர்.
பஞ்சபாண்டவர்கள் நிறுவி வழிபட்ட நான்கு விஷ்ணு சிலைகளில், அர்ச்சுனன் நிறுவி வழிபட்ட விஷ்ணு சிலையே இக்கோவிலில் மூலவராக இருக்கிறது. மற்ற மூன்று விஷ்ணு சிலைகளும் தனித் தனிச் சன்னிதிகளில் இடம் பெற்றிருக்கின்றன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கு அமைந்த சிறப்புமிக்க இக்கோவிலில், சிவபெருமான் சன்னிதி ஒன்றும் தனியாக அமைந்திருக்கிறது. அதுபற்றிச் சுவையான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வசித்து வந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயேத் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில், அவரது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர், தன் தாயைக் காண்பதற்காகக் காசியில் இருந்து திரும்பி வந்தார். அவர் பயணத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வந்த தாழங்குடையில், அவர் வழிபட்டு வந்த காசி விசுவநாதரும் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கொண்டு வந்தார்.
அந்த முனிவர், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட விஷ்ணு சிலைகள் அமைந்த கோவில் பகுதிக்கு வந்த போது, தான் கொண்டு வந்த குடையைக் கீழே வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு வந்த போது, அங்கிருந்த குடை வெடித்துச் சிதறியது. பின்னர், அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அம்முனிவர், அங்கு சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி ஒன்றை அமைத்தார் என்று சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு :
இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.
பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.
இக்கோவிலில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி ஆகியோருக்கும் தனியாகச் சன்னிதிகள் இருக்கின்றன.
வழிபாடுகள் :
இக்கோவிலில் விஷ்ணுவுக்குரிய சிறப்பு நாட்களில் நான்கு விஷ்ணு சன்னிதிகளிலும், சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிவன் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் மலையாள நாட்காட்டியின்படி, மேடம் (சித்திரை) மாதம் ஆண்டுத் திருவிழா, இடவம் (வைகாசி) மாதம் மிருகசீருடம் நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் குரு பூர்ணிமா நாள், சிங்கம் (ஆவணி) மாதம் கிருஷ்ணர் தோற்றம் (கோகுலாஷ்டமி) நாள், கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்கள், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கார்த்திகை தீபத்திருநாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் கும்பம் (மாசி) மாதம் சிவராத்திரி நாளை ஒட்டி நான்கு நாட்கள் இக்கோவிலில் விழாநாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
வழிபாட்டுப் பலன்கள் :
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.
திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக் கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அர்ச்சகர் மூலம் ரிக் வேத சுலோகங்களைச் சொல்லச் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும், வேலை கிடைக்கும் என்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து நதிகள் இணைந்த பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காசி விசுவநாதர் சன்னிதி அமைந்திருப்பதால், இக்கோவிலில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) செய்வது அதிக அளவில் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) நடைபெறுவது இங்குதான் என்று சொல்கின்றனர்.
பாரதப்புழா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக் கோவில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவில் சிறப்புகள் :
* இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 67-வது திருத்தலமாக இருக்கிறது.
* குலசேகராழ்வார் இக்கோவில் இறைவனைப் போற்றிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.
* இறைவன் விஷ்ணு, மன்னன் அம்பரீஷனுக்குத் தனது நான்கு வடிவங்களைக் கொண்ட வியூகத் தோற்றம் காண்பித்து முக்தியளித்த தலம் இது.
* பஞ்சபாண்டவர்கள் வனவாசக் காலத்தில் பெரும்பான்மையான நாட்கள் இங்கேதான் தங்கியிருந்தனர் என்றும், இக்கோவிலில் அவர்கள் தொடர்ந்து பல வழிபாடுகளைச் செய்து, அவர்களது பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றனர்.
* இக்கோவில் மூலவர் பக்தர்களுக்கு ஏற்படும் துயரங்கள் அனைத்தையும் களைந்து, அவர்களுக்கு அபயமளிப்பவராகவும் இருப்பதால், அபயப்பிரதான் (தமிழில் உய்ய வந்த பெருமாள்) என்று அழைக்கப்படுகின்றார்.
* காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காசி விசுவநாதரை வழிபட்டு, அதற்கான பலன்களை அடையலாம்.
* இக்கோவில் சைவம், வைணவம் என்று இரு பிரிவினரும் வழிபடும் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.
அம்பரீஷனின் சிறப்பு :
மன்னனான அம்பரீஷன் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறைவன் விஷ்ணுவை நினைத்து விரதமிருந்து வந்தான். அந்நாட்களில் தனது விரதம் முடிந்து, விஷ்ணுவுக்கு வழிபாட்டுப் பாடல்கள் பாடிப் போற்றிய பின் ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒருநாள், துர்வாச முனிவர் அவனது விரதம் முடியும் வேளையில் அங்கு வந்தார். அவரை வரவேற்ற அம்பரீஷன், அவரைத் தானளிக்கும் உணவை ஏற்கும்படி வேண்டினான். அவர் அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்து அவனளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிச் சென்றார்.
அவர் துவாதசி முடியும் வரை திரும்பி வரவில்லை. தன் விரதத்தை முடிக்க வேண்டிய நிலையில், அம்பரீஷன் சிறிது நீர் பருகித் தன் விரதத்தை முடித்தான். இதனையறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தன் தவ வலிமையால் ஒரு அரக்கனை உருவாக்கி, அம்பரீஷனைக் கொல்ல ஏவினார். அம்பரீஷன் அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றும்படி இறைவன் விஷ்ணுவை வேண்ட, அவர் தன் சக்கரத்தை அனுப்பி அந்த அரக்கனைக் கொன்றார். அதன் பிறகே, துர்வாச முனிவருக்கு அம்பரீஷனின் சிறப்பு தெரிந்தது. அவரும் அவனை வாழ்த்திச் சென்றார்.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவித்துவக்கோடு (திருமித்தக்கோடு) எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, ஷோரனூர் மற்றும் பட்டாம்பி ஆகிய இடங்களில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு :
இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.
அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.
அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.
அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.
உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.
அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.
மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு:
இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.
கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
அற்புத நாராயணர், நரசிம்மர்
வழிபாடுகள்:
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.
இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்ற ருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்கள் :
இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.
குடக்கூத்த அம்மான்:
திருக்கடித்தானத்து இறைவன் ‘அற்புத நாராயணர், அமிர்த நாராயணர்’ என்று போற்றி வழிபடப்படுகிறார். இந்தநிலையில் நம்மாழ்வார் இங்குள்ள இறைவனை, ‘குடக்கூத்த அம்மான்’ என்று போற்றிப் பாடியிருக்கிறார். குடக்கூத்த அம்மான் என்று அவர் குறிப்பிடுவது ஏன்? என்று சில விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
இந்திரனின் சீற்றத்தால் உருவான பெருமழையில் இருந்து கோகுலவாசிகளைக் காக்கக் கிருஷ்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்திருந்து அருளினார். அதனை நினைவு கொள்ளும் விதமாக, பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட நடனம் இந்த ஆலயத்தில் நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.
குடத்தினைச் சுமந்துகொண்டு செல்லும் கோபியர்கள், ஒவ்வொருவருக்கும் தன் மீது தான் கிருஷ்ணனுக்கு அதிக அன்பு என்ற நினைப்பு இருந்தது. அவர்கள் கர்வத்தைப் போக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களைப் பந்துகள் போல மேலெழும்பித் தன்னிடம் வரவழைத்து, மாயச் செயல்களை நிகழ்த்தினான். அப்போது கோபியர்கள் கிருஷ்ணனை மறந்து, குடங் களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்த வெறும் குடத்துக்காகக் கிருஷ்ணனை மறந்து தாவித்தாவிக் கூத்தாடியதைத் தான், ‘குடக் கூத்து’ என்று உருவாக்கியிருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
அமைவிடம்:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு
இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.
அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.
அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.
அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.
உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.
அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக்கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.
மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.
கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
வழிபாடுகள்
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.
இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்கள்
இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.
அமைவிடம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
-தேனி மு.சுப்பிரமணி
தல வரலாறு :
மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அதன்படி பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.
பீமனும் அப்படியேச் செய்தான். துரோணர் உண்மையறியாமல், போரில் தன் மகன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டனரே என்று நினைத்துக் கவலையடைந்தார். அந்த வேளையில் துரோணரைப் பாண்டவர்கள் எளிதில் வீழ்த்தி விட்டனர். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், பீமனுக்குத் தான் சொன்ன பொய்யால்தான் துரோணர் மரணமடைய நேரிட்டது என்கிற குற்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.
பீமன், அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீண்டு மன அமைதி பெறவும், தான் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கவும் வேண்டி ஒரு பழமையான விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தார். அப்போது அங்கிருந்த பழமையான மகாவிஷ்ணு கோவில் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அதே நேரத்தில் அந்தக் கோவில் அமைந்த வரலாறும், அவன் கண்முன்பாக காட்சியாகத் தெரிந்தது.
சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தியின் மகன் விருட்சதர்பி தவறான வழியில் ஆட்சி செய்தான். அதனால் அந்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ரிஷிகளுக்குத் தானமளித்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் நீங்கும் என அறிந்த மன்னன், அத்திரி, வசிஷ்டர், காச்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் மற்றும் ஜமதக்னி எனும் சப்தரிஷிகளை வரவழைத்து அவர்களுக்குச் செல்வத்தைத் தானமாக அளித்தான்.
சப்தரிஷிகள், தீய வழியில் சேர்த்த செல்வத்தைத் தானமாக ஏற்க இயலாது என்று சொல்லி அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், அந்த மன்னன் ரிஷிகளுக்குத் தெரியாமல் எப்படியாவது சிறிது செல்வத்தைக் கொடுத்து, அதன் மூலம் நற்பலனை அடைந்து விட முயன்றான். ஆனால், அவன் செய்த முயற்சி கள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.
அதனால் கோபமடைந்த மன்னன் சப்தரிஷி களைக் கொல்வதென்று முடிவு செய்தான். அதற்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். அந்த வேள்வியில் தோன்றிய ‘கிருத்தியை’ எனும் அரக்கியிடம் சப்தரிஷி களைக் கொல்லும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தான்.
அதனையறிந்த சப்தரிஷிகள் அரக்கியிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டியபடி ஓடினர். உடனே மகாவிஷ்ணு இந்திரனை அழைத்து, அந்த அரக்கியை அழித்து சப்தரிஷிகளைக் காக்கும்படிச் சொன்னார். இந்திரன் புலியாக உருவம் மாறி அரக்கியை அழித்தான்.
சப்தரிஷிகள் மகாவிஷ்ணுவிற்கு நன்றி தெரிவித்து வணங்கினர். அப்போது அவர்கள் முன்பு காட்சியளித்த மகாவிஷ்ணுவிடம் சப்தரிஷிகள், தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருள வேண்டினர். அவர்களது வேண்டு கோளை ஏற்று மகாவிஷ்ணுவும் அங்கு கோவில் கொண்டார். அந்தக் கோவிலே பராமரிப்பின்றி பழமையடைந்து போனது.
பழமையான அந்தக் கோவிலைப் புதுப்பித்த பீமன், மகாவிஷ்ணுவை வழிபட்டு மன அமைதி யடைந்தான் என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
பீமன் பயன்படுத்தியதாக கூறப்படும் கதாயுதம்
கோவில் அமைப்பு :
தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி, கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருக் கிறார். இங்குள்ள இறைவன் ‘மாயபிரான்’ என்றும், இறைவி ‘பொற்கொடி நாச்சியார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திர நாளிலும், விஷ்ணுவுக்குரிய பிற சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி தனு (மார்கழி) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா, பத்தாம் நாளில் நடைபெறும் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. இதே போல் மகரம் (தை) மாதம் முதல் நாளில் இக்கோவிலில் காவடியாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் வழிபடுபவர்களுக்கு எதிரிகள் மறைமுகமாகச் செய்யும் அனைத்துத் தீயசெயல்களும் முறியடிக்கப்பட்டு வெற்றிகள் வந்தடையும் என்கிறார்கள். மேலும் ஒருவர் அறியாமல் செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.
ஆலய சிறப்புகள் :
* இக்கோவில் சப்தரிஷிகளுக்கு மகாவிஷ்ணு மாயப்பிரானாகக் காட்சியளித்த தலமாகும்.
* பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட ஐந்து கோவில்களில் (அஞ்சம் பலம்) ஒன்றாக இருக்கிறது.
* பீமனால் புதுப்பிக்கப்பட்டதால் இக்கோவில் ‘பீமன் கோவில்’ (பீமச் சேத்திரம்) என்றும் அழைக்கப்படுகிறது.
* இத்தல இறைவனைத் திருப்புலியூரப்பன் என்றும் அழைக்கின்றனர்.
* இந்த ஆலயம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது.
* பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கதாயுதம் ஒன்று இக்கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.
* இக்கோவிலின் முன்பகுதியிலுள்ள கொடிமரம் பிற கோவில்களை விட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் செங்கணூரில் இருந்து மேற்குப் பக்கமாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புலியூர். கோட்டயம் நகரில் இருந்து 38 கிலோமீட்டர் அல்லது திருவல்லா நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் பயணித்துச் செங்கணூர் சென்று இத்தலத்தினைச் சென்றடையலாம். செங்கணூரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்