search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting Special Camp"

    தமிழகத்தில் நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #VoterList
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் பற்றிய விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி மற்றும் 23-ந்தேதி, கடந்த 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டன. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (விண்ணப்பம்-6) 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 231 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 675 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.



    பெயர் நீக்கம் செய்ய (விண்ணப்பம்-7) 1 லட்சத்து 36 ஆயிரத்து 199 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (விண்ணப்பம்-8) 1 லட்சத்து 80 ஆயிரத்து 708 பேரும், முகவரி மாற்றம் செய்ய (விண்ணப்பம்-8ஏ) 1 லட்சத்து 12 ஆயிரத்து 916 பேரும், வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 140 பேர் ஆன்-லைன் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.

    இவ்வாறு மொத்தம் 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 பேர் நேற்று (நேற்று முன்தினம்) வரை விண்ணப்பித்துள்ளனர்.

    தொடர்ந்து ஆன்-லைன் மற்றும் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வருகிற 31-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VoterList

    ×