search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women helpline"

    தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற ஹெல்ப்லைன் எண் வசதி மற்றும் அதற்கான கால் சென்டரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #WomenSafety #Helpline181
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது. பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



    பெண்கள் பாதுகாப்புக்கான ஹெல்ப்லைன் மையத்தை நிர்வகிக்க 5 வக்கீல்கள், 5 மனநல ஆலோசகர்கள் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

    இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. #WomenSafety #Helpline181
    ×