search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Sfety"

    ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது.
    பெண்களிடம் அபார ஆற்றல் ஒன்று இருக்கிறது, அது ‘மல்டி டாஸ்க்’ எனப்படும் பன்முகத்திறன். அதனால் அவர் களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும். இது அவர்கள் வீட்டு வேலைகளை பார்ப்பதிலும், அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் கைகொடுக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், இதில் சில அபாயங்களும் அடங்கியிருக்கின்றன.

    பெண்களுக்கு உழைப்பு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஓய்வும் மிக அவசியம். தங்களால் இயன்ற வேலையை அளவுடன் செய்துவிட்டு மூளைக்கும், உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம். சரியான ஓய்வு கொடுக்காவிட்டால், நாளடைவில் மனஅழுத்தம் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்பு களுக்கு வழி வகுக்கும். ஆண்கள் சாதாரண நிலையில் நிதானமாக தங்கள் வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் ‘மல்டிடாஸ்கிங்’ எனப்படும் பன் முகப் பணியால், ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் எளிதில் சோர்வடைந்து விடுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து அதிக பணிஅழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.

    பெண்கள், ஒரு வேலையை நேரத்தோடு செய்து முடிப்பது மட்டும் சாதனையல்ல. அந்த வேலை அவர்களது மனதுக்கோ, உடலுக்கோ அழுத்தம் கொடுக்காத அளவுக்கு செய்து முடிப்பதுதான் அந்த வேலையின் வெற்றி. ஒன்றுக்கு மேற்பட்ட வேலை எல்லோருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போது ஒவ்வொரு வேலைக்கும் உண்டான நுணுக்கத்தை கையாண்டு திறம்பட அந்த வேலைகளை செய்து முடிக்க கொஞ்சம் பொறுமை தேவை.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களால் தங்கள் வேலைகளை பொறுமையாக செய்ய முடியாது. ஒன்றை செய்துகொண்டிருக்கும் போதே இடையில் அடுத்த வேலையின் நினைவு வந்து பயமுறுத்தி பொறுமையை இழக்கச்செய்யும். அப்போது துரிதமாக அந்த வேலைகளை செய்துமுடிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும்போது அதில் முழுகவனத்தையும் செலுத்தமுடியும்.

    மல்டி டாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனம் சிதறும். இது பற்றி பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆய்வு நடந்தது. அதில், ‘ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பெண்களுக்கு அதிக தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக’ தெரியவந் திருக்கிறது. காரணம் பெண்களுக்கு தவிர்க்க முடியாத உணர்வுபூர்வமான சில வேலைகளும் உள்ளன. உதாரணமாக ‘பிளே ஸ்கூலில்’ விட்டுவிட்டு வந்த குழந்தையை திரும்ப வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும். இந்நேரம் குழந்தை அம்மாவை காணாமல் அழுதுகொண்டிருக்கும். வீட்டில் வயதானவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும்’ என்பன போன்ற சிந்தனைகள் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.



    இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்போது அதைக் கடந்து அவர்களால் இதர வேலைகளில் முழுகவனம் செலுத்தமுடியாது. இதுதான் பெண்களின் நிலை. இந்த நிலையில், அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களை அறியாமலே சில தவறுகள் நடந்துவிடும். அந்த தவறுகளில் சிலவற்றை சரிசெய்வது கடினமான கூடுதல் வேலையாகிவிடும். அதனால் சில பின்விளைவுகளோ, எதிர்விளைவுகளோ உருவாகிவிடும். அப்போது ஏற்படும் மனஉளைச்சல் உடலையும், மனதையும் பாதிக்கும்.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது செயல்வேகம் குறைந்து, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றன்பின் ஒன்றாக பல வேலைகள் தாமதமாகின்றன. பல வேலைகளை ஒன்றாக முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்யும் பெண்களால் எதையுமே நேரத்தோடு செய்து முடிக்க முடிவதில்லை. காலம் கடந்து முடிக்கும் சில வேலைகள் பயனில்லாமல் போய்விடுகிறது. இதுவும் பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது. அப்போது தனது அத்தனை திறமைகளையும் ஒருமுகப்படுத்தி அந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்று சிந்திப்பதற்கு பதில், அவர்களது மூளை அந்த வேலையை எப்படி எளிதாக செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடும். அப்போது ‘இன்னும் கொஞ்சம் புதுமையாக என்ன செய்யலாம்? முன்பைவிட சிறப்பாக அதை எப்படி செய்யலாம்?’ என்று சிந்தித்து செயல்பட மூளைக்கு அவகாசம் இருக்காது.

    அமைதியான மனநிலையில்தான் மூளை புதுமைகளைப் பற்றி சிந்திக்கும். அவசரத்தில் எந்த புதுமையையும் எந்த பெண்ணாலும் படைக்க முடியாது. மூளை ஒரு இயந்திரத்தைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டால், செய்யும் வேலையில் எந்த மாற்றமும் இருக்காது. அச்சுஅசலாக ஒரே மாதிரிதான் அந்த வேலை அமையும். அப்படி எல்லா பெண்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், வேலையில் புதுமை- வித்தியாசம் என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

    மல்டி டாஸ்க் பணியில் நிரந்தரமாக ஈடுபடும் பெண்களின் மூளை எளிதாக சோர்ந்துவிடும். மூளை சோர்ந்து போகும்போது உற்சாகம் குறையும். ஞாபகமறதியும் தோன்றும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மூளையில் தேக்கி வைத்துக்கொண்டு செயல்படுவது, பெண்கள் மூளைக்கு தரும் ‘ஓவர்லோடு’ ஆகிவிடுகிறது. ஓவர் லோடு வேலை ஒருபோதும் பெண்களுக்கு நலனாக அமையாது. அதனால் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடித்து, உங்கள் மனதையும், உடலையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கு வதைவிட, செய்கிற வேலையை ரசித்து செய்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது. மகிழ்ச்சியான வேலையே மனம் நிறைந்த வேலை.
    ×