search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workshop worker killed"

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் ஒர்க்ஷாப் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் எல்லைக்காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

    இவர் கருமத்தம் பட்டியில் உள்ள கிரீல் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், மோகன பிரியா என்ற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் மகேந்திரன் மனைவி அஞ்சலியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. வழக்கமாக இரவு சென்றால் காலையில் தான் வருவார் என்பதால் அவரை தேடவில்லை. இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது என கூறி உள்ளார்.

    மகேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமாச்சி பாளையம் என்ற இடத்தில் கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினார்கள். மகேந்திரனை அவரது நண்பர்கள் யாராவது ராமாச்சி பாளையம் பகுதிக்கு அழைத்து வந்து இருக்கலாம்.

    பின்னர் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய விரட்டி இருக்கலாம். மகேந்திரன் உயிர் தப்பிக்க ஓடும் போது அவரை விரட்டி சென்று கள்ளப்பாளையம் பகுதியில் கொலை செய்து இருக்கலாம் என தனிப்படையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மகேந்திரன் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×