search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "writer prabanjan"

    எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதுவையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
     
    கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.



    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதையேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து, தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பிரபஞ்சனின் உடல் இன்று காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை 4 மணியளவில் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் உள்ள இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Prabhanjan
    ×