என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம்
- ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.
- சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
திருக்கோயில் பெயர்: அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
காலம்: சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர்
இறைவன் பெயர்: தாண்டேஸ்வரர்
இறைவியின் பெயர்: தாண்டேஸ்வரி (எனும்) அங்காளம்மன்
தலவிருட்சம்: வில்வம், வாகை
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
ஆறு: சக்கராபரணி
ஸ்ரீ அங்காளம்மன் தல வரலாறு
ஆதி சதுர்யுகத்தில் கிரேதாயுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரம்மஹத்தி தோசம் நீக்கியும், கலியுகமாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண்புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.
ஸ்ரீ அங்காளம்மன் அவதாரம்
அகிலாண்டகோடி என்றும், பிரம்மாண்டநாயகி என்றும், ஆதி சக்தி என்றும், பராசக்தி என்றும், போற்றுதலுக்கும், புகழ்தலுக்கும், வணங்குதலுக்கும், குலதெய்வமாகி அருளும் தலைமைத்தாய் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற முப்பெருந்தேதியராகி முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளுடன் இணைந்து முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்ததாகவும், இந்த ஆதி சக்தியான அங்காளி ஐந்து உற்சவங்களில் தனித்த சக்தியாகவே இருந்ததாகவும், ஆறாவது உற்பவத்தில் தக்கனுக்கு மகளாக தாட்சாயணி தேவியாக அவதரித்ததாகவும், அனைத்து ஆற்றலையும் பெறத்தக்க விதங்களில் தக்கன் செய்த யாகத்தை அழிக்கக் கருதிய தாட்சாயணி தேவியின் கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற சிவசக்தியின் பஞ்சமுக தத்துவமாகி சத்யோஜாதம், வாமவேதம், ஈசானம், தாத்புருஷம், அகோரம் என்ற திருமுகக்கணல் பொறிகளாக ஒன்று திரண்ட உருவமற்ற அசரீரியே அங்காளி ஆகும்.
ஆவி, ஆன்மா என்ற உயிராக, உயிரியாக, உருவமாகி விளங்கிடவே பருவதராஜன், மேனை என்பாருக்கு "பார்வதி" என்ற பெயரில் திருமணச்சடங்கின் மூலம் ஆதி சிவனுடன் ஈஸ்வரியாக இணைந்தாள்.
சக்தி பீடங்கள் தோன்றி அருளல்
தக்கன் யாகத்து தீயில் உயிரைவிட்ட தாட்சாயணி தேவியின் பூதஉடலை சிவபெருமான் தாங்கொண்ணா துயரச் சீற்றத்தில் தன் தோள்மீது சுமந்து நர்த்தண தாண்டவம் ஆடி, உடல் உறுப்பு துணுக்குகளை சிதைத்து சிதறுர செய்துவிட்டார். அந்த உடல் உறுப்பு துணுக்குகள் விழுந்த இடங்களே மகிமைமிகு சக்தி பீடங்களாகும். எண்ணற்ற சக்தி பீடங்கள் தோறும் உருவ சக்தியாக விளங்கி அருள அங்காளியே, சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, ஆயி, பெரியாயி, மகமாயி, அங்காயி, மாக்காளி, திரிசூலி, காமாட்சி, மீனாட்சி, அருளாட்சி, அம்பிகை என்ற எண்ணற்ற பெயர்களில் சக்திபீட தேவதையாக விளங்கி அருள்பாலிக்கின்றாள்.
மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்
மேல்மலையனூர் ஆதியில் தண்டகாரண்யம். சிவபெருமான் தாட்சாயணிதேவியின் பூதஉடலை சுமந்து நர்த்தனதாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, இந்த தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.
சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது
முத்தொழிலையும் ஏற்று நின்ற மூம்மூர்த்திகளில் தாங்களுக்குள் யார் பலசாலி, பெரியவர்கள் என்ற வீணான சர்ச்சையால் சிவபெருமான் கோப ஆவேசத்தில் பிரம்மாவின் சிரசை கொய்து சிவன் பிரமதோஷம் கொண்டான். அது முதல் பித்தன், பேயன் என்றாகி சுடுகாடு தோறும் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக தண்டகாரண்யம் என்ற மேல்மலையனூருக்கு வருகிறான்.
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் மேல்மலையனூரில் விலகியது.
மாசி மாதம் சிவன் ராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம். அன்றுதான் அனைத்து மூலாதார சக்தியான அங்காளி ஒன்று திரண்ட சிற்சக்தி என்ற ஒரே சிற்சக்தியாக விளங்கி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் சூரையிடும் நாள். அதையே மயானக்கொள்ளை என்று கூறுவர். மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்மன் ஆவி, ஆன்மா என்ற பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிடும் சமயம் சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
மேல்மலையனூரில் அங்காளி "ஸ்ரீ அங்காளம்மனாக அமர்ந்தது"
சிவபெருமானைவிட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்மன் என்ற ஆவி, ஆன்மா சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் சிவபெருமானை பற்றிக்கொள்ள, பிடித்துக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள். இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு அவர்கள் விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டதாகவும், சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்றே சிவ சுயம்பு உருவமாகி அப்புற்றுக்குள் குடி கொண்ட கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றதாகவும் கூறுவர்.
இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றதாகவும், அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லாத காரணத்தால், விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுததாகவும், அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லாத காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாகவும், கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம் காளம் அம் அன் ஸ்ரீ அங்காளம்மனாக அமர்ந்ததாக வரலாறு.
ஸ்ரீ அங்காளம்மன் திருவிழாக்கள் தோற்றம்
அம்மனின் வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரவே எழுந்த நாட்களே திருவிழாவாகும். மாசிமாதம் சிவன்ராத்திரி அன்று சிவபெருமான் வந்து தங்கிய இரவை சிவன்ராத்திரி என்றும் அன்றே இரவில் சக்தி கரக திருவிழா என்றும், மறுநாள் பூரண அமாவாசை தினம் அன்றே சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி விலகி அங்காளி அங்காளம்மன் ஆனாள் என்று அறிந்த வண்ணம் அன்றைய தினத்தையே மயானக்கொள்ளை என்றும் இரண்டாம் நாள் திருவிழா என்றும் இன்று இரவுதான் "ஆன்பூதவாகனத்தில் அம்மன் பவனி" என்றும் மறுநாள் பெண் பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், சிங்கவாகனத்தில் அம்மன் பவனி என்றும் ஐந்தாம் நாள்,
அன்னவாகனத்தில் அம்மன் பவனி என்றும் அன்று பகலில் அம்மனுக்கு சீற்றம், கோபம், ஆவேசம், ஆத்திரத்தின் நிலையாக கருதி தற்காலம் தீமிதி திருவிழா என்றும் ஆறாம் நாள், தேவர் உலகத்தில் இருந்து வந்த வெள்ளை யானையில் அம்மன் பவனி என்றும் ஏழாம் நாள் தேவர்களின் உருவமாகிய திருத்தேரில் அம்மன் பவனி என்றும், எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை குதிரைவாகன பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த நாக வடிவில் 9 தலைக்கொண்ட நாகத்தில் அமர்ந்த 9 தலை நாக வாகன பவனி என்றும், பத்தாம் நாள் அனைத்து ஆபரணங்களையும் கொண்ட "சத்தாபரண திருவிழா என்றும், தெப்பல் திருவிழா" என்றும் ஆதி முதல் இன்று வரையில் என்றும் பழைமைக் குன்றாத ஆதி திருவிழாவாகக் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு. அம்மன் வரலாற்றை தொடர்புபடுத்தி வேறு எங்கும் இதுபோன்ற திருவிழா கொண்டாடவில்லை என்பதும் தனி சிறப்பு.
அங்காளம்மனுக்கு திருவிழா கொண்டாடுவது
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள். சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக நடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படிம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூ கணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக அறிந்தோம்.
அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தாங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத்தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது அப்போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறிந்த வண்ணம், இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவை சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூரையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள். ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்னும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கம் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
ஐந்தாம் நாள் வனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் மற்றும் ஆறாம் நாள் தேவர் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், மற்றும் ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும்,
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூரவே குதிரைவாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூரவே 9 தலை நாகவாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும். தற்கால திருவிழாவாக அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் சார்பாக ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக "தீமிதி" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூரவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வரே இந்த பத்து நாள் திருவிழாவாகும். இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருவதால் ஏற்படக்கூடிய பயன்கள்
ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல், இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று கொள்கிறோம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும். அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன். அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.
குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு தங்களின் வம்சாவழியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதனை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.
இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார். இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரம்மஹக்தி தோஷம் பிடித்துவிட்டதாகவும், இந்த பிரம்மஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசி மாதம் விலக்கியதாகவும் அறிந்த வண்ணம், சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்மஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள், பீடைகள், சகடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், சகடைகள் போன்றவற்றை விலக்கி நல்வாழ்வு தரும் தெய்வம், வழிபாட்டு தெய்வம் அங்காளம்மன் ஆகும். பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை பிராத்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.
தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருவதால் ஏற்படக்கூடிய பயன்கள்
ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும். அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை. இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம். இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியாங்குபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரம்மஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரம்மஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரம்மஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம். இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். இதை ஆதிக்குடிகள், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்ற ஐந்து நிலப்பிரிவுகளிலும் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவ்வாறே வழிபாட்டை செய்து இருந்தனர்.
அங்காளம்மன் என்ற இந்த தொன்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்ட, செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் கொண்ட மகிமைமிகு சக்தி பீடம் அமைந்துள்ள ஊரே மேல்மலையனூர். இவ்வூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் அருகில் உள்ள ரெயில் நிலையங்கள், திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், காட்பாடி ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் ஆகும்.
மேல்மலையனூர்-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது மற்றும் மேல்மலையனூர்-செஞ்சி, திண்டிவனம், பாண்டிக்கும் மேல்மலையனூர்-விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர்-ஆரணி வேலூர் செல்லவும், மேல்மலையனூர்-அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும், மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூரு செல்லவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி-மேல்மலையனூர், திண்டிவனம்-மேல்மலையனூர், பாண்டிச்சேரி - மேல்மலையனூர், திருவண்ணாமலை-மேல்மலையனூர், விழுப்புரம்-மேல்மலையனூர், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு-மேல்மலையனூர், பெங்களூரு-மேல்மலையனூர் ஆகிய ஊர்களில் இருந்து நேரடியாக செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்