என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
அம்மனை கண் குளிர தரிசித்த சித்தர்
- சித்தரின் மேனி முழுவதும் புற்றுக்களாலும், புதர்களாலும் மூடப்பட்டன.
- சித்தர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்களை தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் ஒவ்வொரு தலத்திலும் ஈடு, இணையற்ற ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த சித்தர்களின் அருளாற்றல் மங்கா விளக்காக என்றென்றும் கலங்கரை விளக்கமாக ஒளிவீசி, மக்களை வழி நடத்துகின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலும் ஒரு சித்தர் நிஷ்டையாகி உள்ளார். அந்த சித்தரின் பெயர், சிவயோக ஞானசித்தர்.
இந்த சித்தர் இருக்கன்குடிக்கு வந்து ஐக்கியம் ஆனதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது.
சிவயோக ஞான சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள சதுரகிரிமலையில் வசித்து வந்தார். அவருக்கு அன்னை பராசக்தியை நேரில் கண் குளிர கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
உடனே அவர் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சதுரகிரிமலையில் தவம் இருந்தார். பல ஆண்டுகளுக்கு அவரது தவம் தொடர்ந்தது. அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் எனும் 5 கோசங்களை வென்று, ஜெகதாம்பிகை குறித்து அனுதினமும் தியானித்து, மானச பூஜையை அவர் ஒரே இடத்தில் இருந்து நடத்தி வந்தார்.
சிவயோக ஞான சித்தரின் மன உறுதி குலையாத தவ வலிமையை கண்ட அன்னை பராசக்தி அவர் முன் தோன்றினாள்.
ஏ... ... அன்பனே, என்னைக் குறித்து தவம் இயற்றும் காரணம் என்ன? என்று கேட்டார்.
மறுவினாடி சித்தர் கண் விழித்தார். பராசக்தியை கண்குளிர, மனம் மகிழும் வகையில் தரிசித்தார். பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து அன்னை பராசக்தியை வணங்கினார்.
சாஷ்டாங்க நிலையிலேயே அவர், சர்வ ஜீவாதார ஜெகத்ரட்சகி, சகல பாவ நிவாரணி, பராசக்தி, பரம கிருபாகரி, பக்த பராதீனகி, பக்தரட்சகி, இந்த பரம ஏழையை காப்பாற்றுவாய் என்றார்.
அவரை வாழ்த்திய பராசக்தி, நீ எதற்காக தவம் இருந்தாய்? உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் தருகிறேன் என்றாள். அதற்கு சிவயோக ஞானசித்தர், ஜெகதாம்பிகை, நான் பல நாட்களாக உன் பெயரை மட்டுமே மந்திரமாக தியானித்து வந்துள்ளேன்.
நான் உன் அடிமை. இந்த அடிமை எந்த இடத்தில் நிஷ்டை ஆகிறேனோ, அந்த இடத்தில் உன் சன்னதி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும். அன்னையே இதுதான் என் விருப்பம் என்றார்.
இதை கேட்டு அன்னை பராசக்தி மனம் பூரித்தாள். பிறகு அவள், பக்தனே, வெகு நாட்களாக என்னை குறித்து தவம் செய்தமையால், நீ சித்தர்களில் ஒருவனாக சேர கடவாய் என்று ஆசி வழங்கினாள்.
அதன்பிறகு சிவயோக ஞானசித்தர் எந்த இடத்தில் நிஷ்டை ஆக வேண்டும் என்பதையும் அன்னை பராசக்தியே வரையறுத்து கூறினாள்.
அர்ச்சுனா நதியும் வைப்பாறும் கூடி சங்கமமாகும் இடத்தில் உன் மனம் போல அமர்வோம் என்று அன்னை பராசக்தி வாக்குறுதி அளித்தாள்.
அதன் பேரில் சிவயோக ஞானசித்தர் அர்ச்சுனா, வைப்பாறு நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமிக்கு வந்தார். அந்த இடத்திலேயே நீண்ட நாட்கள் இருந்த அவர், அன்னை மாரியம்மனின் திருமேனியை வடிவமைத்தார்.
பிறகு அந்த புண்ணிய பூமியில், பல, பல இடங்களில் தங்கி, நேம நிஷ்டை அனுஷ்டானம் செய்து வந்தார். இனி பிறவாமை வேண்டாம் என்று கூறி அம்பிகையின் திவ்ய நாமங்களையே மந்திரமாக சொல்லி வந்தார்.
ஒருநாள் அவர் தான் எப்படி நிஷ்டையில் ஐக்கியமாக போகிறேன் என்பதை ஊர் மக்களுக்கு தெளிவாக கூறினார்.
சுத்தசாத்வீக சூக்ம நாதத்தில் மனதை செலுத்தி சூரிய கலை, சந்திரகலையில் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு எனும் நான்கு தத்துவத்தில் வந்து விலகும். அப்போது பிராண வாயு ஆகாய தத்துவத்தில் அடையும்.
அச்சமயம் சுவாசம் குறைந்து வரும். அக்காலம் எது என அறிந்து வாசிஸ்தம்பனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறிவிட்டு சிவயோக ஞானசித்தர் அஷ்டாங்க யோகத்தில் அமர்ந்து தவம் இயற்றினார். ஆடாமல், அசையாமல் அவர் ஒரே இடத்தில் அமர்ந்து ஆழ் தியானத்துக்கு சென்றார்.
நாளடைவில் சித்தரின் மேனி முழுவதும் புற்றுக்களாலும், புதர்களாலும் மூடப்பட்டன. இந்த நிலையிலேயே அவர் அந்த புண்ணிய பூமியில் நிஷ்டையாகி ஐக்கியம் ஆனார்.
அவர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் சிவயோக ஞான சித்தர் அருவுருவமாக வந்து தினம், தினம் அன்னை பராசக்தியை வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்