என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கேட்டவர்க்கு கேட்ட வரம் அளித்த அன்னை
- ‘சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம்.
- தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.
சுக முனிவர் அறிந்த சோதிடக் கலை
துன்பத்தில் உழல்வது மானிடப் பிறப்பு. நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு சுக, துக்கங்கள் நிகழ்கின்றன. பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவும் நமது தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துபவை நவகிரகங்கள். பன்னிரண்டு ராசியிடங்களில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றன அந்த நவகோள்கள்.
கோள்களின் விளையாட்டு மானிட வாழ்வு. அந்தக் கோள்களுக்கு எப்படிப்பட்டவர்களும் ஆட்பட்டே தீர வேண்டும்.
'முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
பொதிவறு திருவொடு பொலிவ ராயினும்
மதியின ராயினும் வலியின ராயினும்
விதியினை யாரே வெல்லும் நீர்மையார்?
என்று தனது கந்த புராணத்தில் கேட்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
'சோதிடம் பொய்க்கா தென்று
சாற்றுவர் பெரியோர்'
என்பது வில்லிபுத்தூர் ஆழ்வாரின் கூற்று.
எனவே விதியினை யாராலும் வெல்ல இயலாது. இருப்பினும் விதியின் விளையாட்டை முன்கூட்டியே அறிய முடியுமா?
இந்தக் கேள்வி முதன்முதலாக சுகமுனிவரின் மனத்திலே எழுந்தது.
சிவனை எண்ணி ஐந்தெழுத்தை ஓதினார்.
சிவனார் காட்சி தந்தார்.
தனது கேள்வியை ஆண்டவனிடம் வைத்தார்.
'சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம். விதியை வென்றவன் ஒருவன் இருக்கிறான். அவன் என் அன்பு மகன் மார்க்கண்டேயன்! அவனை அடைந்து தெளிவு பெறுவாய்!' என்றார் இறைவன்.
சிவனுரை ஏற்ற சுக முனிவன் செண்பக காட்டை அடைந்து மார்க்கண்டேயரைப் பணிந்தான்.
மார்க்கண்டேயர் சொன்னார்: 'சுகமே! விதியை வெல்வது கடினமே! என் அப்பனின் அருளால் அதை வெல்ல முடியும். அதே போல விதியை முன்கூட்டியே அறியவும் வழியுண்டு. நவக்கிரகங்களைப் படைத்து அவைகளைக் கட்டப்படுத்துபவள் ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தி திருவேற்காட்டிலே கருமாரியாகக் கோவில் கொண்டு விளங்குகிறாள். அவளைப் பணிந்து இதற்கொரு வழி காண்போம்' என்றார்.
இருவரும் வேற்காடு அடைந்தனர்.
பனைத்தாயை வாழ்த்தி, அகத்தியரைப் பணிந்து, புற்றுருகுற்று கருமாரியைப் போற்றினர்.
தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.
'மகனே! நாடி வந்து நாடியைப் பற்றிக் கேட்கின்றாய்! திருநீற்றைப் பூசி சிவாய நம என்று சொல்லிப் பவுர்ணமி நாளில் ஐம்புலனை அடக்கி காத்த வீரனைப் பணிவாய்! பெரிய நாடி, கலைநாடி, இடை நாடி ஆகிய நாடிகளின் நிலையறிந்து பெருமைமிக்க சோதிடக் கலையை ஓதாது உணர்வாய்' என்று திருவாய் மலர்ந்தருளினாள் தாய்.
அன்றிலிருந்து கலைகளின் தாயாம் கருமாரியின் வாக்கினால் சோதிடக்கலை இப்பூவுலகில் நிலைபெற்று விளங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்