search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி விரதமும் புராண கதைகளும்
    X

    நவராத்திரி விரதமும் புராண கதைகளும்

    • அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம்.
    • விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார்.

    நவராத்திரி விரதமும் புராண கதைகளும்நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை.

    இராமாயணத்தில் நவராத்ரி:

    வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் ஏற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

    மஹாபாரதத்தில் நவராத்ரி:

    சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரதத்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    சுசீலனது கதை:

    முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

    நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு:

    குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம்.

    Next Story
    ×