search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முத்தாரம்மன் கோவில்: மாறுவேடம் போடும் பக்தர்கள்
    X

    முத்தாரம்மன் கோவில்: மாறுவேடம் போடும் பக்தர்கள்

    • கடும் நோன்பு மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தைப் புனைவோரை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.
    • பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்ந்து, புனைந்து கொள்கின்றனர்.

    வேடம் புனைதல் 'மாறுவேடத் திருவிழா' என்று இங்குக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக 'வேடம்புனைதல்' உள்ளது. தனது உண்மை உருவத்தை, உண்மையான இயல்புகளை மறைத்துத் தனக்கு முற்றிலும் மாறுபட்ட வேடத்தை அணியும் போது சில நாட்களுக்கேனும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறி, புதியதொரு வாழ்வை வாழும் வாய்ப்பு மனிதனுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே வேடம்புனைதல் நிகழ்ச்சி பக்தர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தகைய நிலையைக் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா விழாவிலும் காணமுடிகிறது. தசரா விழாவன்று வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகுதலை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

    தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம். காளிவேடம் புனைவோர் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்கின்றனர். ஒவ்வொரு தசராக் குழுவிலும் காளிவேடம் புனைவோர் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் உள்ளனர். காளி இல்லாத தசராக் குழுக்கள் காணப்படவில்லை. சூரசம்ஹாரத்தன்று இக்காளிவேடம் புனைந்தோர் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்கின்றனர். அம்மன் மகிசனைக் கொல்ல புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருகின்றனர். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் புனைந்தோர் அம்மனைச் சூழ்ந்து நிற்கின்றனர்.

    காளி வேடம் புனைதல் மிகக் கடுமையான நோன்புக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் நோன்பு மேற்கொள்கின்றனர் அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு உண்கின்றனர். தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து, இரு பொழுது குளித்து நோன்பு மேற்கொள்கின்றனர். இவ்வாறு நோன்பு மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாட்கணக்கில் காளிவேடம் புனைகின்றனர்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், பெண் மார்பகத்துக்கான துணிப்பந்துகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும். இப்பொருட்களின் மொத்த அளவு இருபது கிலோ வரை இருக்கும்.

    கடும் நோன்பு மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தைப் புனைவோரை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வேடங்களைப் புனைந்திடினும், காளிவேடம் புனைந்தால் அம்மனே வந்ததாகப் பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கையளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி வருவதால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை உருவாகிறது. எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் மிக அதிகமாகி வருவது மேற்குறித்த கருத்தினை உறுதிசெய்வதோடு அதற்கு ஒரு சமூக மரியாதை இருப்பதையும் அடையாளம் காட்டுகிறது. காளி வேடத்தை ஆண்களே புனைகின்றனர். பெண்கள் புனைவதில்லை. இதில் உள்ள கடுமையான விரதமும் அருள் பெற்று ஆடும் கருணையும் எதையும் தாங்கும் மனப்பக்குவமும் அம்மன் மீதுள்ள அச்சமும் மாதவிடாய் உள்ளிட்ட தீட்டுப் பண்புகள் ஏற்படாத் தன்மையும் 'காளி' தவ வேடத்தைப் பெண்கள் ஏற்காமைக்குக் காரணங்கள் ஆகும்.''

    கடுமையான இக்காளி வேடத்தைப் பல பக்தர்கள் விரும்பி ஏற்கின்றனர். காளியை அம்மன் அவதாரம் என்று எண்ணுவதும் நோய் தீர்த்த அம்மனுக்குத் தம் நன்றியை வெளிப்படுத்த உகந்தது கொடூரமான அவளது காளி வேடமே என்று எண்ணுவதுமே இதற்குக் காரணம் ஆகும்.

    காளி வேடம் புனைவோர் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் புனைவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் புனைவோர் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமியாடுபவரிடமோ கணக்குக் கேட்டு, தாம் புனையவிருக்கும் வேடம் குறித்து முடிவு செய்கின்றனர். இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு சில ஆண்டுகளாக மாறி வருகிறது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்ந்து, புனைந்து கொள்கின்றனர்.

    எந்த வேடத்தை ஏற்றாலும் நோன்பிருத்தல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் புனைவோர் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப நோன்பு இருக்கின்றனர். இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்கின்றனர்.

    கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன், சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, பேய் போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடிகிறது.

    சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து புனைகின்றனர். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றிப் புனைந்து கொள்கின்றனர். எந்த வேடம் புனைவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் புனைந்து கொள்கின்றனர்.

    பல்வேறு வேண்டுதல்களை நிறைவு செய்ய நேர்த்திக் கடனாகப் பக்தர்கள் இந்த வேடங்களைப் புனைகிறார்கள். இவர்கள் தங்களுக்குப் பிடித்த வேடம் புனைந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெறுகிறார்கள். தனியாகவோ, குழுக் குழுவாகவோ செல்கிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வலம் வருவதைத் தசரா நாட்களில் பரவலாகக் காணமுடிகிறது.

    தம் அழகைக் குலைத்து, தம் கர்வத்தைப் பங்கப்படுத்தவே நோன்பு இருந்து, திருக்காப்புக் கட்டி, வேடம் புனைந்து, தனியாகவோ அணி அணியாகவோ தர்மம் எடுத்துக் கோயிலில் கொண்டு சேர்ப்பது தான் குலசை முத்தாரம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வேடம் புனைவோர் பெரும்பாலும் குழுக்களாக வருகின்றனர். இக்குழுக்களில் வயது வரையறையின்றி எல்லோரும் இடம் பெறுகின்றனர். இவை இன அடிப்படையிலும் ஊர் அடிப்படையிலும் அமைகின்றன. ஊர்க்குழுவில் ஓர் ஊரைச் சார்ந்த பல இனத்தவரும் கலந்து கொள்கின்றனர். தசராக் குழுவினர் அணி அணியாக ஊர்தோறும் சென்று சூரசம்ஹாரத்தன்று கோவிலுக்கு வந்து சேர்கின்றனர். முத்தாரம்மன் கோவில் வழிபாட்டுச் சிறப்பைப் பெறத் தொடங்கிய நாளிலிருந்தே தசராக் குழுக்களும் கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளன.

    வேடம் புனையும் தசராக் குழுக்கள் சில விதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்தல் வேண்டும். இக்குழுக்களில் பத்து வயதுக்கு மேற்பட்ட, ஐம்பது வயதிற்கு உட்பட்ட பெண்கள் இடம்பெறுதல் கூடாது. வேடம் புனைவோர் கொடியேறிய நாளிலிருந்து நோன்பு மேற்கொள்ள வேண்டும். காளிவேடம் புனைவோர் நாற்பத்தொரு நாட்கள் நோன்பு மேற்கொள்ள வேண்டும். தசராக் குழுக்கள் தங்கள் ஊரிலுள்ள கோவில் அல்லது பொது இடம் ஒன்றில் விழா முடியும் நாள் வரையிலும் தனி இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றனர். அங்கேயே சமைத்து உண்கின்றனர்.

    வேடம் புனையத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் வந்து, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்குச் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பியதும். வேடம் புனையத் தொடங்குகின்றனர், வேடம் புனைந்ததும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குகின்றனர். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுகின்றனர்.

    வேடம் புனைவோர் நாள்தோறும் இருவேளை குளித்து, தூய்மையை மேற்கொள்கின்றனர். ஒரு வேளை மட்டுமே உண்கின்றனர். அசைவ உணவு, மது, புகை ஆகியவற்றைக் கைவிடுகின்றனர். வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்கின்றனர். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

    தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து ஊர்மக்களும் நடத்துகொள்கின்றனர். அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தசராக் குழுவினர் தங்கியிருக்கும் இடம் ஊரிலுள்ள பெண்களால் தூய்மை செய்யப்படுகிறது. தசராக் குழுவினர் நடத்தும் பூசைகளிலும் ஆட்டங்களிலும் ஊர் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வதையும் காணமுடிகிறது.

    தசராக் குழுவினர் ஒவ்வொரு நாளும் தாம் தங்கியிருக்கும் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்கின்றனர். கோவில் அல்லாத தனியிடத்தில் தங்குபவர்கள் விளக்கு அல்லது அம்மன் படம் ஒன்றை வைத்து அதை அம்மனாகப் பாவித்து வழிபாடு செய்கின்றனர். காலையில் குளித்து இவ்வழிபாட்டைச் செய்தபிறகே, தம் அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    தசராக் குழுவினர் நோன்பைத் தொடங்கிய நாள் முதல் வேடம்புனைதல், ஊர் ஊராகச் செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்குக் கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.

    பண்டைய காலத்தில் பக்தர்கள் தங்கள் முகங்களில் வண்ணப்பொடிகளைப் பூசியும், வண்ணப்புள்ளிகளை வைத்தும் வேடமிட்டு நேர்த்திக்கடனைச் செலுத்தி வந்தனர்.

    இந்நாளில் பெரும்பான்மையான பக்தர்கள் பல்வேறு உருவ முகமூடிகளைக் கொண்டும் அவ்வுருவத்திற்கேற்ப அலங்கரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும் வேடம் புனைகின்றனர். பக்தர்கள் வேட ஒப்பனைகளுக்காக ரூ.150லிருந்து ரூ.1500 வரையிலும் செலவு செய்கின்றனர். மிகச் சிலர் மட்டும் முகத்தில் வண்ணமிட்டும் புள்ளிகள் வைத்தும் வேடமிட்டு வேண்டுதலைச் செலுத்துகின்றனர். இப்புள்ளியிடும் முறையினைப் பழைய வேடம் புனைதலில் எச்சமாகக் கருதலாம். இம்முறை பக்தர்களுக்கு அலங்கரித்தலிலும் பொருட் செலவிலும் சிக்கனமாக உள்ளது.

    பக்தர்கள் காலையில் பூசை முடித்ததும் ஒப்பனை செய்து கொள்ளத் தயாராகின்றனர். ஒவ்வொரு தசராக் குழுவினரும் ஒப்பனை செய்வதற்கென்று ஓர் ஒப்பனையாளரை நியமித்துக் கொள்கின்றனர். தசரா விழா முடிந்ததும் அவருக்கு அத்தொழிலுக்குரிய தொகை கொடுக்கப்படுகிறது. முக அலங்காரமும் உடை அலங்காரமும் செய்யப்பட்டதும் கோவில் பூசாரி அல்லது குழுவில் உள்ள பெரியவர் ஒருவர் தெய்வங்களின் வேடங்களைப் புனைந்தோருக்கு அத்தெய்வங்களுக்குரிய ஆயுதங்கள், கிரீடம் ஆகியவற்றைக் கொடுக்கிறார். அவற்றைப் பெற்றுக் கொண்டதும், பக்தர்கள் அருள் வரப்பெற்று ஊர்ஊராகச் செல்லத் தயாராகின்றனர்.

    வேடம் புனைந்த நாள் முதல் தசரா விழா முடியும் நாள் வரை இக்குழுவினர் ஊர்தோறும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். பின்னர் லாரி வேன், ட்ரக்கர் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பல ஊர்களுக்குச் செல்கின்றனர். முதலில் தாங்கள் செல்லும் ஊர்களில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, அங்கேயே மேளதாளம் முழங்க ஆடுகின்றனர். அதன் பின்னரே வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று காணிக்கை பெறுகின்றனர். மக்கள் கூடும் வீதிகளிலும் சந்தைகளிலும் கடைகளின் முன்பும் இவர்கள் கூட்டமாக ஆடித் தம் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர்.

    தசராக் குழுவினர் கிராமங்களுக்கும் பெருநகரங்களுக்கும் செல்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்கள் மட்டுமன்றி, சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களிலும் இக்குழுவினர் காணிக்கை பெற்று வருகின்றனர்.

    தசராக் குழுவினர் ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெறுவதோடு, நன்கொடைச் சீட்டுக்கள் மூலமும் காணிக்கை வசூலிக்கின்றனர். இக்காணிக்கைத் தொகை குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் குழுவினர் செல்லும் ஊர்களைப் பொறுத்தும் ஆயிரம் முதல் இலட்சக்கணக்கான தொகை வரை வசூலாகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையினைக் குழுவினர் தங்களது வேடம் புனைதலுக்கான செலவுக்கும் மேளதாளம், கரகாட்டம், உணவு, வாகன வாடகை போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். எஞ்சியிருக்கும் தொகையினை முத்தாரம்மன் கோவிலில் காணிக்கையாகச் செலுத்தி விடுகின்றனர்.

    சில தசராக் குழுவினர் காணிக்கையாகப் பெறும் பெரும் தொகையினைத் தசரா விழாச் செலவுகளுக்கும் கோவில் காணிக்கைக்கும் கொடுத்தது போக, மீதியைத்தம் ஊர்க்கணக்கில் வங்கியில் வைப்பு நிதியாகச் சேமித்து வைக்கின்றனர். இத்தொகையினைக் கொண்டு அடுத்த ஆண்டு தசரா விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்தகையோர் முத்தாரம்மன் கோவிலில் காணிக்கையாகச் செலுத்துகிற தொகை ரூ.11, ரூ.21, ரூ.101 என்ற அளவில் காணப்படுகிறது.

    காணிக்கைத் தொகையை வங்கியில் வைப்பு நிதியாகச் சேமிப்பது முன்னாளில் இல்லாத நடைமுறையாகும். இது இந்நாளில் பரவலாகி வருகிறது. இப்புதிய முறை பக்தியில் வாணிக நோக்கம் படர்வதைப் புலப்படுத்துகிறது.

    ஒவ்வொரு குழுவினரும் ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரையிலும் தசரா விழாவிற்காகச் செலவு செய்கின்றனனர்.

    Next Story
    ×