search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பலவகை ஆஞ்சநேயர்
    X

    பலவகை ஆஞ்சநேயர்

    • சுசீந்திரம் ஆஞ்சநேயர் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
    • அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.

    குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.

    இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்வலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

    பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர்.

    ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

    அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

    ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.

    வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

    அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

    பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

    பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.

    சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

    வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.

    பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

    பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

    யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

    யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.

    ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

    பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

    திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

    Next Story
    ×