search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் விரதம்
    X

    ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் விரதம்

    • ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பர்.
    • ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம். இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள்.

    ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.

    சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்கு சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்.

    ஆடி செவ்வாய் விரதம்

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் என்றொரு விரதம் இருப்பார்கள். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள்.

    மூத்த சுமங்கலி வழிகாட்ட, இளம் பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் பல்வேறு உருவ அமைப்பு-களில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மை படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வ துண்டு, இதனை மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி, என்று சொல்வார்கள். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.

    Next Story
    ×