என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
அனுமன் ஜெயந்தி
- சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
- அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும் சிவனின் அம்சமாக தோன்றியவர்.
மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.
எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம்.
பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.
சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச் செயல்புரம் என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை. அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.
ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி, சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது.
இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி.
அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார்.
இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.
இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு.
வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார்.
சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.
எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை.
நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன் சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர்.
இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக் கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி நான் திரும்பச் செலுத்துவேன்.
எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள் போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறான்.
நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று, அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை.
இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும்.
ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்