search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரெஞ்சுகாரர்கள் மனதை மாற்றிய அதிசயம்
    X

    பிரெஞ்சுகாரர்கள் மனதை மாற்றிய அதிசயம்

    • பிரெஞ்சு கவர்னர் துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார்.
    • 1400-களில் நெசவாளர்கள் கருவறை மட்டும் கட்டி இருந்தனர்.

    புதுச்சேரியை ஆண்டு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை சமமாக நடத்தவில்லை. அடிமைகள் போலவே நடத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் `சுவாமி வீதி உலா' என்ற பெயரில் மணக்குள விநாயகர் உற்சவர் சிலையை தெருத் தெருவாக எடுத்துச் சென்றதை பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து எரிச்சலாகவே பார்த்து வந்தனர்.

    எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்டர் தின நாட்களிலும் விநாயகர் உற்சவர் வீதி உலா நடத்தக் கூடாது என்று சேசு அடியார்கள் கூறினார்கள். இதை ஏற்று 1701ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் புதுச்சேரி கவர்னர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மணக்குள விநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். விநாயகர் சிலையை உடைக்கவும் சதி திட்டம் தீட்டப்பட்டது.

    இதை அறிந்ததும் புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். பிறகு அவர்கள் நாங்கள் எங்கள் விநாயகருடன் இந்த ஊரை விட்டே வெளியேறி சென்னைக்கு சென்று விடுவோம் என்று அறிவித்தனர்.

    இதனால் தொழில்கள் முடங்கி, ஆட்சிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த புதுச்சேரி கவர்னர் பிரான்ஸ்வா மர்த்தேன், யாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி தடுத்து நிறுத்தினார். பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்திய கவர்னர், விநாயகர் வீதி உலா செல்ல தடை இல்லை என்று அறிவித்தார்.

    ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணக்குள விநாயகருக்கு திருவிழா நடத்தவும், வீதி உலா நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் 1706-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலில் முன்பு போல விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    மறுநாளே நெசவாளர்கள், விநாயகர் உற்சவரை மணல் குளத்துக்கு எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டி, திருமஞ்சனம் செய்தனர். என்றாலும் மணக்குள விநாயகர் கோவிலை சிதைப்பதில் சில பிரெஞ்சுக்காரர்கள் தீவிரம் காட்டினார்கள். ஆனால் மணக்குள விநாயகரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

    இதையடுத்து வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனையை நடத்தக் கூடாது என்றனர். மேளதாள வாத்தியங்கள் முழங்கக் கூடாது. கொம்பு ஊதக் கூடாது. தேவதாசிகள் நடனம் இடம் பெறக்கூடாது என்று அடுக்கடுக்காக தடை உத்தரவிட்டனர்.

    பக்தர்கள் நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கான தடை நீங்கியது. பிறகு நாட்கள் செல்ல, செல்ல பிரெஞ்சுக்காரர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. மணக்குள விநாயகரை அப்புறப்படுத்தும் முயற்சியை முழுமையாக கை விட்டனர். மணக்குள விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கினார்கள்.

    பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் அவர்களது மனதிலும் மணக்குள விநாயகர் இடம் பிடித்தார். அர்த்த மண்டபத்துக்கு அடுத்தப்படியாக கோவில் முன்பு மகாமண்டபம் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தனர்.

    மணக்குள விநாயகரின் மகிமைகளை ஒவ்வொன்றாக அறிந்து, கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். விநாயகர் சிலையை உடைக்க உத்தரவிட்டவர்களே, அந்த விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.

    கோவிலை இடிக்க நினைத்தவர்களே, கோவில் திருப்பணிகளை முன்நின்று செய்தனர். பிரெஞ்சு கவர்னராக இருந்த துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார். துப்லெக்ஸ் கவர்னராக இருந்த ஆட்சிக்காலத்தில் மணக்குள விநாயகர் கோவில் மீது யாரும் எந்த ஒரு சிறு தாக்குதலும் நடத்தவில்லை. மணக்குள விநாயகரை வணங்கிய பிறகே எதையும் செய்யத் தொடங்கினார். மணக்குள விநாயகரின் மகிமைக்கு இது ஒரு சான்றாகும்.

    ஆலயம் அன்றும் - இன்றும்

    மணக்குள விநாயகர் எந்த காலக்கட்டத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அது போல அரச மரத்தடியில் இருந்த விநாயகருக்கு 1400-களில் நெசவாளர்கள் சிறு கருவறை மட்டும் கட்டியது மட்டுமே தெரிகிறது.

    15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளில் மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரி கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    16-ம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பலர் திருப்பணி செய்துள்ளனர். தொள்ளைக்காது சித்தர் ஜீவ சமாதி ஆன பிறகு மணக்குள விநாயகர் வழிபாடுகள் ஆகம விதிமுறைகளுக்கு மாறின.

    1900-களின் தொடக்கத்தில் புதிய மூலவர் சிலை வைக்கப்பட்டது. மூல விநாயகர் இடது பக்கம் வைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் பாரதியார் மணக்குள விநாயகரை 8 ஆண்டுகள் வழிபட்டார்.

    பிரெஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு மணக்குள விநாயகர் ஆலத் திருப்பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மறு ஆண்டே 1955-ல் மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை அவர்களால் தேக்கு கொடி மரம் நிறுவப்பட்டது.

    1957-ம் ஆண்டு முதல் ஆவணி மாதம் ஆண்டு பெரு விழாவான பிரம்மோற்சவம் நடத்துவது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவம் 58-வது பிரம்மோற்சவமாகும்.

    1956-ம் ஆண்டு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு 1966-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    1986-ம் ஆண்டு புதிய உற்சவமூர்த்தி உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வெள்ளித்தேர் ஓடியது. 1986-ம் ஆண்டு தங்கத்தேர் விடப்பட்டது.

    1994-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. 1999-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2004-ம் ஆண்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர் அர்ப்பணிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் செய்து சார்த்தப்பட்டது.

    2009-ம் ஆண்டு இத்தலத்துக்கு என இணையத்தளம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆலயம் முழுவதும் குளிரூட்டப்பட்டது.

    2011-ம் ஆண்டு உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணி செய்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஆலயம் தரை முழுவதும் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது. கருவறை தவிர ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×