என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பொருள் வளம் சேர்க்கும் புரட்டாசி சனி

- மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை புனிதமான சனிக்கிழமையாகக் கருதப்படுகிறது.
- அலங்காரப் பிரியர் விஷ்ணு என்பதால் பச்சைப் பட்டும், வாசமலரும் அணிவித்தால் பணவரவு திருப்தி தரும்.
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வந்து கொண்டே தான் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னிதிக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் 'சனி பிடிக்காத தெய்வம்' என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம். ஆதியந்தப்பிரபு வழிபாடும் ஆனந்த வாழ்வை வழங்கும்.
ஆனால் மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை புனிதமான சனிக்கிழமையாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. அலங்காரப் பிரியர் விஷ்ணு என்பதால் பச்சைப் பட்டும், வாசமலரும் அணிவித்தால் பணவரவு திருப்தி தரும்.
குறிப்பாக செட்டிநாட்டுப் பகுதிகளில் ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து ராமாயணம் படிப்பது வழக்கம். கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கிறார்கள். இங்ஙனம் ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்பவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. நல்ல வாழ்க்கையும் அமைகின்றது.
எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு நேரமேனும் விரதமிருந்து அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் பெருமைகள் வந்து சேரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயணசுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், புதுக்கோட்டை மாவட்டம் செவ்வூரில் உள்ள ரோட்டுப் பெருமாள் கோவில், முதலைப்பட்டியில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் புரட்டாசி சனிக்கிழமை அன்று சென்று வழிபட்டவர்களுக்கு பொருள் வளம் பெருகி பொன்னான வாழ்க்கை அமையும்.
இதுபோல அவரவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு புரட்டாசி சனிக்கிழமை சென்று லட்சுமி சமேத விஷ்ணுவையும், மாருதியையும் வழிபட்டால் மன மகிழ்ச்சி நிலைக்கும்.