search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ரேணுகா தேவி  கதை
    X

    ரேணுகா தேவி கதை

    • பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
    • அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக காட்சி அளிக்கிறாள்.

    பக்தர்களின் குறைகளை களைந்து, வேண்டும் வரம்களை உடனுக்குடன் வழங்கும் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் ரேணுகா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இது தொடர்பான புராண கதை வருமாறு:-

    முன்னொரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் தவம் இருந்து வந்தார். அவரது மனைவியே ரேணுகாம்மாள். அவர்கள் ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாசு, பரசுராமர் என்ற நான்கு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுள் இளையவர் பரசுராமர்.

    ஒருநாள் பூஜைக்கு வேண்டிய மலர்களையும், நீரையும் கொண்டு வரச் சென்ற ரேணுகாதேவி, மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும் போது, வானத்தில் பவனிசென்ற ஒரு கந்தர்வனின் உருவ நிழலை நீரில் கண்டாள். அவனது பேரழகைக் கண்டு சிறிது நேரம் ரசித்தாள். அவ்வளவுதான். மண்குடம் கரைந்து போனது இதனால் செய்வதறியாது தவித்தாள்.

    இதை அறிந்த ஜமத்கனி முனிவர் வெகுண்டெழுந்தார். தன் மகன்களை அழைத்தார் உம் தந்தையின் தவ வலிமையே அழிவுறும் வண்ணம் செய்ய முனைந்த உங்கள் தாயை தலை வேறு உடல் வேறாக வெட்டி எறியுங்கள் என்று கட்டளையிட்டார்.

    மூத்த மகன்கள் 3 பேரும் முடியாது என்று ஒதுங்கினார்கள். அதைக் கண்ட முனிவர் மேலும் கோபம் கொண்டு அவர்களை போதராஜன், காட்டண்ணன், கருப்பண்ணசாமி என்ற தேவதைகளாக உருமாற்றி சாபமிட்டார்.

    பிறகு பரசுராமனை அழைத்தார். நான் சொல்வதை செய்! உன் வாளால் உன் தாயின் கழுத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்றார் முனிவர்.

    நிலைதடுமாறிய பரசுராமர், தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தார்! மகிழ்வுற்றார் முனிவர். பரசுராமரை பாராட்டியதோடு இரண்டு வரங்களையும் அவனுக்கு அளிப்பதாக கூறினார்.

    பரசுராமர் அந்த வரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

    முதலாவதாக எனது தாயை கண்டு வணங்கி அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதற்கு என் தாய் வேண்டும்'' என்றார்.

    உடனே ஜமதக்கினி முனிவர் மகனிடம் கமண்டல நீரைக் கொடுத்து, வெட்டுண்ட உன் தாயின் தலையையும், உடலையும் ஒன்றாக இணைத்து, அத்தீர்த்தத்தை தெளித்தால் அவள் உயிர் பெறுவாள் என்று கூறினார்.

    ஆவலுடன் அக்கமண்டலத்தைப் பெற்ற பரசுராமர், அவசரத்தில் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலும், தலையும் கிடந்ததை சரியாக கவனிக்காமல், அப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை சேர்த்து கமண்டல நீரைத் தெளித்துவிட்டார்.

    ரேணுகாதேவி உயிர் பெற்றெழுந்ததும் முன்போன்ற உடல் இல்லாமல் போய் விட்டதே என்பதை உணர்ந்தாள். பரசுராமரும் அப்போது தான் அந்த தவறை அறிந்து வருந்தினார்.

    இந்நிலையில் ஒருநாள் நாகலோகத்து அரச குமாரன் கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் தம் குமாரர்கள் நூறு பேர்களுடன் புறப்பட்டு வந்து ஜமத்கினி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவை கொடுக்குமாறு வேண்டினார்கள். முனிவர் மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு அப்பசுவை இழுத்துச் சென்றார்கள்.

    கணவனுக்கு நேர்ந்த கதியை பார்த்த ரேணுகாதேவி கணவனுக்காக மூட்டிய சிதையில் தானும் குதித்தாள். அப்போது பலத்த மழை பெய்தது.

    இதனால் தீ அணைந்தது மழைநீர் வெள்ளமாகப் பெருகி ஆற்று நீருடன் கலந்து சென்றதால் ரேணுகாதேவியின் தீப்புண் பட்ட உடலும் மிதந்து சென்று ஒரு இடத்தில் கரை ஒதுங்கியது.

    மயக்கம் தெளிந்து பார்த்தாள் ரேணுகாதேவி தீயில் எரிந்து போய், வெற்றுடலில் வெந்த புண்களுடன் தனியே தவித்திருக்கும் அவளது நிலைமையை அளவிட்டுக் கூறிட இயலாது.

    அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக கட்டிக் கொண்டு அந்த வழியே வந்த வயதான முதாட்டியின் தயவால் அவளிடம் அடைக்கலம் புகுந்தாள் தேவி.

    மூதாட்டி தேனும், தினைமாவும் அளித்து, வெந்த புண்களுக்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து வைத்து கட்டி குணப்படுத்தினாள். படிப்படியாக புண்கள் எல்லாம் மறைந்தன.

    பரமனிடமும் பார்வதியிடத்திலும் மாறாத பக்தி கொண்டிருந்த ரேணுகாதேவி சக்தி அம்சங்களைப் படிப்படியாகப் பெற்று விளங்கத் தொடங்கினாள். அத்தேவியே தெய்வமாக மாறி பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மனாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றாள்.

    இத்திருத்தலத்தில் அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக விளங்குகின்றாள். ஐந்து தலைநாகம் தலைக்குமேல் குடை விரிக்க அகிலம் வியக்கும் வண்ணம் அருளாட்சி புரிந்து வருகின்ற இத்தேவியின் திருக்கோவிலில் அருட்பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.

    உலகச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் நாம் கொஞ்சமாவது அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டுமானால், பவானி அம்மன் அன்னை வழிபாட்டை செய்தல் வேண்டும்.

    Next Story
    ×