search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வன்னி இலையும் விநாயகரும்
    X

    வன்னி இலையும் விநாயகரும்

    • மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    • மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது.

    விதர்ப்ப தேசத்தில் ஆதேயம் என்ற நகரம் இருந்தது. அங்கே வீமன் என்ற வேடன் வசித்து வந்தான்.

    தீமைகளையே தொழிலாகக் கொண்டிருந்த அவன் கொலை, கொள்ளை போன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் ஒருநாள் வெளியூர் பிராமணர்கள் சிலர் ஆதேயம் நகரில் நடந்த கோவில் திருவிழாவை காண வந்தனர்.

    வீமன் அவர்களிடமிருந்த பொருட்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை கொலையும் செய்து விட்டான். அதனால் வீமனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

    வீமனைப் போல கொலை, கொள்ளையில் தேர்ந்த ராட்சதன் வீமனிடம் பொருட்களைக் கொள்ளையடிக்க வந்தான். அவனைக் கண்டு வீமன் பயந்து காட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வன்னிமரம் ஒன்றில் ஏறி ஒளிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியில் விநாயகர் இருந்தார்.

    வீமன் ஏறிய வேகத்தில் வன்னிமர இலை ஒன்று உதிர்ந்து விநாயகரின் காலடியில் விழுந்தது. இதனிடையே வீமனைத் துரத்தி வந்த ராட்சதனும் மரத்தில் ஏறினான்.

    இதனால் மரத்தின் கிளைகள் அசைந்து மேலும் வன்னி இலைகள் விநாயகர் காலில் விழுந்தன. மேலும் மரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கை கலப்பின்போது மரத்தில் இருந்து இலைகள் கீழே இருந்த விநாயகர் மீது விழுந்தன.

    பின்னர் அவர்கள் இருவருமே மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள். அப்போது வன்னி இலைகள் விநாயகரின் மேல் பட்டதனால் அவர்கள் செய்த திவினைகள் அழிந்து போய் தெய்வ உருவம் பெற்றனர்.

    விநாயகப் பெருமானின் அருளால் தெய்வலோகத்தில் இருந்து தங்க விமானம் வந்தது. அதில் ஏறி கணேசருலகத்தை அடைந்து பெரு வாழ்வு பெற்றனர்.

    தொப்பை இல்லாத ஆதி விநாயகர்

    விநாயகர் என்றதும் யானைத்தலை, பானை வயிறு இந்த இரண்டும்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்கு உன்னிப்பாக பார்த்தால் யானைக்கு இருப்பது போன்று சிறிய கண்கள், விசிறி போன்று காது, ஒடிந்த நிலையில் ஒரு தந்தம், திறனை வெளிப்படுத்தும் துதிக்கை, கொஞ்சமாக பேச வேண்டும் என்பதை உணர்த்தும் சிறிய வாய் போன்றவற்றை பார்க்கலாம்.

    விநாயகரின் தோற்றத்தை மேலும் ரசித்தால் அவரது நான்கு கரங்கள் என்னென்ன சுமந்து கொண்டிருக்கிறது? துதிக்கை இடம் சுழியாக உள்ளதா அல்லது வலஞ்சுழியாக உள்ளதா என்பதை எல்லாம் பார்த்து கண்டு களிக்கலாம்.

    இத்தகைய வித்தியாசமான உருவமைப்புடன் உள்ள விநாயகரைப் பார்க்கும் போது அவரை கொஞ்ச வேண்டும் போல் தோன்றும். மணக்குள விநாயகரும் இப்படித்தான் இருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறாகும்.

    ஏனெனில் மணக்குள விநாயகருக்கு தொப்பை கிடையாது. அவரது உருவமும் மற்ற விநாயகர் சிலை அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    இதுபற்றி ஆலய குருக்களில் ஒருவர் கூறியதாவது:-

    மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் உருவ அமைப்பு எங்களுக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மிக அருகில் இருந்து நுட்பமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும்.

    அந்த விநாயகரின் வடிவம் தொன்மைக் கால சிற்பக் கலை நுணுக்கத்தோடு உள்ளது. விநாயகர் உடல் மெலிந்த உடல்வாகு போன்றிருக்கும்.

    தன் இரண்டு கால்களையும் மடக்கி சப்பணம் போட்டு அமர்ந்த கோலத்தில் அவர் உள்ளார். இத்தகைய உருவ அமைப்பில் உலகில் வேறு எங்கும் விநாயகர் சிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    இவர் குறிப்பிடும் விநாயகர் தற்போது ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் கருவறையில் இருந்து பெயர்த்து படகில் எடுத்துச் சென்று கடலில் தூக்கி வீசினார்கள். ஆனால் அவர் கரை திரும்பி இருந்த இடத்துக்கே வந்து விட்டார்.

    வெள்ளைக்காரர்களின் கை, இவர் மீது பட்டதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக நீண்ட நாட்களாக பக்தர்களும், சமயப் பெரியவர்களும் கூறி வந்தனர். அதற்கான பரிகாரங் கள் செய்யப்பட்டாலும் அந்த விநாயகரை மீண்டும் வெள்ளைக் காரர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் புதுச்சேரி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.

    இந்த நிலையில்தான் தொள்ளைக் காது சித்தர் ஜீவசமாதி ஆனார். அவரது உடல் மணல் குளத்தின் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதும் விநாயகர் கோவில் வழிபாடுகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற தொடங்கின.

    அப்போது ஆகம விதிப்படி வெளிநாட்டவர் கைபட்ட சிலை தீட்டுப்பட்டது என்றும் எனவே வேறொரு புதிய விநாயகர் சிலையை கருவறையில் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் சமயச் சான்றோர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து வழிபாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் மற்றொரு விநாயகர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படுகிறது. அன்று முதல் ஆலய கருவறையில் இரண்டு விநாயகர்கள் உள்ளார்கள். பிரெஞ்சுக்காரர்களால் கடத்தப்பட்டு மீண்டு வந்த விநாயகர் ஆதி விநாயகர் என்றும், புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட விநாயகர் மூல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    கருவறையில் உள்ள இந்த இரு விநாயகர்களுக்கும் ஒரே மாதிரி அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தடவை நீங்கள் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு செல்லும் போது உன்னிப்பாகப் பாருங்கள். அருகருகே இரு விநாயகர்கள் இருப்பது தெரியும்.

    மூல விநாயகராக எழுந்தருளி உள்ள புதிய விநாயகரின் இடது கைப்பக்கம் ஆதிவிநாயகர் உள்ளார். இவரை முதன்மை முதல்வன் என்றும் அழைத்து சிறப்பிக்கிறார்கள்.

    மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது. இந்த சிலையும் பல நூற்றாண்டுகளாக நெசவாளர்களால் மணல் குளத்தங்கரை ஒரத்தில் இருந்த அரச மரத்தடியில் வைத்து வணங்கப்பட்ட சிலையாகும். இந்த மூவருக்கும் ஒரே மாதிரி அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×