search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!
    X

    ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!

    • முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
    • முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.

    ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!

    தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.

    முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.

    சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.

    Next Story
    ×