search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காளிகாம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்
    X

    காளிகாம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    Next Story
    ×