search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மருதூர் நவநீத கிருஷ்ணர் கோவில்
    X

    மருதூர் நவநீத கிருஷ்ணர் கோவில்

    • மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
    • குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடுகிறார்கள்.

    நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான்.

    அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.

    எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார். குறிப்பாக ஏகாதசி விரதம் இருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

    விட்டிலாபுரம் பாண்டுரங்கன்

    நெல்லை மாவட்டம் விட்டிலாபுரத்தில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது.இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது.

    அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

    ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.16ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது.

    இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றில் இருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது.

    ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி `வேண்டிய வரம் கேள்,' என்றார்.

    விட்டலராயனும், `பெருமாளே! தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்,' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றில் இருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.

    Next Story
    ×