search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆலய அமைப்பே நம் உடல்
    X

    ஆலய அமைப்பே நம் உடல்

    • இதய கமலமாகிய கர்ப்பகிரஹத்தில் பரமாத்மாவான ஜீவாத்மா கோயில் கொண்டுள்ளார்.
    • ஆலயத்தில் தினமும் ஐந்து வகையான வழிபாடுகள் நடைபெறும்.

    ஆலயம் என்பது நம் உடலைப் போன்றது. ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபம், யாக மண்டபம், வியாகரண மண்டபம், நிருத்த மண்டபம், அர்த்த மண்டபம் முதலிய ஆறு மண்டபங்களும் நம் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களைப் போன்றதாகும்.

    இதய கமலமாகிய கர்ப்பகிரஹத்தில் பரமாத்மாவான ஜீவாத்மா கோயில் கொண்டுள்ளார். கோயிலின் கொடிமரம் நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு. இவ்வாறு எல்லா வகையிலும் நம் உடலானது ஆலய அமைப்பினைக் கொண்டுள்ளது.

    ஆலயத்திற்குத் தூய்மை வேண்டும். அதேபோல் நம் உடம்பிற்கும் தூய்மை வேண்டும். ஆலயத்தில் பக்தி வளரும். நம் உடம்பிலும் பக்தி பரவ வேண்டும்.

    ஆலயத்தில் தினமும் ஐந்து வகையான வழிபாடுகள் நடைபெறும். அதேபோல நாமும் ஐம்புலன் அடக்கத்துடன் வாழ வேண்டும்.

    இந்த நிலையில் மனித வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைவது ஆலயமும், வழிபாடும் தான்.

    இல்லறத்தில் மனைவி, மக்கள், பதவி என்று அல்லற்படுவது சிற்றின்பம். இறைவனின் திருவடியை மறவாமல் இருப்பது பேரின்பம். சிற்றின்பத்தை சிறுகச் சிறுக விட்டுவிட்டால் பேரின்பம் பெருகும். அந்த மனப்பக்குவம் வருவதற்கு ஞானம் வேண்டும். ஞானத்தால் அஞ்ஞானம் விலகி ஈசனைத் தரிசிக்கலாம்.

    கடவுளின் பேரருளைப் பெறுவதற்கு - அவன் திருவடித் தாமரைகளை அடைவதற்கு - நான்கு மார்க்கங்கள் கூறப்படுகின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும்.

    சரியை என்றால் நாம் நம் உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்வது. ஆலயத்தைச் சுத்தப்படுத்தல் - மெழுகிக் கோலமிடுதல் மலர்வனம் அமைத்தல் - திருக்குளத்தைச் சுத்தப்படுத்துதல் பூமாலைகள் தொடுத்துக் கொடுத்தல் முதலிய திருப்பணிகளைச் செய்வதாகும்.

    கிரியை என்றால் இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும் பாவித்து வழிபடுவதாகும். அருமறை ஓதுதல், எம்பெருமானின் புகழ் பாடுதல், மெய்மறந்து சங்கீர்த்தன பஜனை செய்து ஆடிப்பாடுதல், பிரவசனம் செய்தல் முதலியன கிரியை எனப்படும். இந்த மார்க்கத்தால் நாம் இறைவனின் அணுக்கத் தொண்டராக இருக்கும் பெரும் பாக்கியத்தைப் பெறுகின்றோம்.

    யோகம் என்பது ஐம்புலன் அடக்கத்துடன் தியானத்தில் அமர்ந்து, யோகன நிலையில், பகவானை நம் ஆன்மாவினால் வணங்குதல். இதுவே சாரூபம்! சாரூபம் என்றால் இறைவனின் பேருருவத்தை நாம் உள்ளத்தால் கண்டு களித்து பக்தி செய்வதாகும்.

    நான்காவது வழியான ஞானம் என்பபடுவது, புராண நூல்களையும், சாஸ்திரங்களையும் வேத, உபநிஷதங்களையும் கற்றுணர்ந்து எம்பெருமானின் கல்யாண குண விசேஷ வைபங்களை நமக்குள்ளே எண்ணி வணங்கி மகிழ்தல் ஆகும். இதனால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையைப் பெறலாம்.

    Next Story
    ×