search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    துவாபரயுகமும் கருமாரியும்
    X

    துவாபரயுகமும் கருமாரியும்

    • கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.
    • பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

    தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான்.

    தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

    'கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்'

    'தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதா?' என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான்.

    ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன.

    தேவகியின் எட்டாவது கர்ப்பம்.

    அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன்.

    அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள்.

    அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி.

    தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

    இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது.

    யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது.

    அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது.

    குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான்.

    பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

    இருந்தும் கம்சன், 'உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்' என வானதிர சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

    அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.

    'அடேய் ஆத்திரக்காரா! கரு மாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா!

    உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு' என்று சொல்லி மறைந்தது.

    கரு மாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் 'கருமாறி' என்றான்.

    அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் 'கருமாரி, கருமாரி' என்று அழைக்கத் தொடங்கின.

    இப்படித்தான் கருமாரி உருவானாள்.

    கம்சனின் கண்ணில் இருந்து மறைந்த அவள் கண்ணனிடம் சென்றாள்.

    தானெடுத்த ஒரு பிறவி இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டதே என அண்ணனிடம் ஆதங்கப்பட்டாள்.

    'இல்லை, கருமாரி என்ற பெயருடன் நீ அகிலத்தை ஆட்சி செய்யப் போகிறாய்.

    நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பார்' என கண்ணன் கூறினான்.

    Next Story
    ×