search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
    X

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

    • திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது.
    • மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

    ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு ஆலயங்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமாகும்.

    ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.

    இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.

    இத்தகைய திருமணங்களை நடத்த ஊருக்கு ஊர் பழக்க & வழக்கம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் பழமை மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய அர்ச்சகர்களே ஆண் & பெண் வேடமிட்டு திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். இந்த சேவைக்காகவே இக்கோவிலில் இரண்டு விதமான அர்ச்சக பரம்பரையினர் காலம், காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    குலசேகர பட்டர் பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மாப்பிள்ளை வேடம் ஏற்பார். உக்கிரப்பாண்டி பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மணமகள் வேடம் ஏற்பார். அவர்களை இறைவன், இறைவியாகக் கருதி திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கலய பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.

    அதன்பிறகு திருக்கல்யாணத்தின் முக்கியச் சடங்கான மங்கல நான் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இறைவிக்கு திருமாங்கல்யம் கட்டப்படும் போது, பெண்கள் தாங்களும் தங்களுக்கு திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வார்கள்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் போது திருமால் கன்னிகாதானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன், மீனாட்சியம்மையை மணக்கிறார்.

    திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. அதை மதுரை தலத்தில் சிறப்புற காணலாம்.

    இந்த திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் இறைவன், இறைவிக்கு பட்டுப்புடவைகள் திருமாங்கல்யம் மற்றும் மொய்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. கோவில் சார்பாக திருமாங்கல்யம், மஞ்சள் கிழங்கு, விபூதி, குங்குமம் கொண்ட பிரசாதபையை பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.

    தனி நபர்களும் வேண்டுதலின் பேரில், பக்தர்களுக்கு மாங்கல்யப் பிரசாதம் கொடுப்பார்கள். இறைவன், இறைவிக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்பவர்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும்.

    மதுரையைப் போலவே காஞ்சீபுரத்தில் காமாட்சி & ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

    திருமாங்கல்யம் கட்டப்பட்ட பிறகு இறைவன், இறைவி சார்பாக மணக்கோலத்தில் உள்ள சிவாச்சாரியார்கள் அக்னி வலம் வருதல், பொரி தூவுதல், அம்மி மிதித்தல் போன்ற சடங்குகளை நடத்தி காட்டுவார்கள்.

    வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் இறைவன், இறைவிக்கு பதிலாக அர்ச்சர்களே மணமக்கள் வேடம் அணிந்து மாலை மாற்றி கொள்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரிவாரத் தெய்வங்களாக வரதராஜ பெருமாள், நரசிங்க பெருமாள் இருப்பதால், இத்தலத்தில் ஆண்டுக்கு மூன்று தடவை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மார்கழி மாதம் பார்த்தசாரதி & ஆண்டாள் திருமணம், மாசி மாதம் ரங்கநாதர் & வேதவல்லி தாயார் திருமணம் மற்றும் பங்குனி உத்திர நாளில் நடக்கும் திருமணம் என 3 தடவை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரம் தினத்தன்று தான் திருக்கல்யாண விழாக்கள் நடத்தப்படுகிறது. அன்று பக்தர்கள் விரதம் இருப்பது காலம், காலமாக நடந்து வருகிறது. இந்த விரதத்துக்கு திருமண விரதம் என்று பெயர்.

    வீட்டில் மங்கலகாரியம் நடப்பதற்கு துணை புரிவதால், எல்லா தலங்களிலும் திருக்கல்யாண விழாக்கள் ஆண்டு தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது.

    எந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் மிகச் சிறப்பாக திருக்கல்யாணம் நடத்தப்படுகிறதோ அந்த ஊரில் உள்ள பெண்கள் திருமண யோகத்தை உரிய காலத்தில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஐதீகத்தை புரிந்து கொள்ளாமல் ஆலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாண விழாக்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.

    எனவே இனியாவது ஆலய திருக்கல்யாணங்களில் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டு அதில் பங்கேற்று இறைவழிபாடு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை. இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தெரிந்து கொண்டு வழி பட்டால் உரிய பலனை பெற முடியும்.

    உலகமும், உயிர்களும் தொடர்ந்து இயங்க, இறைவன் நமக்கு ஆற்றும் பேரருளை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகிறது என்ற உண்மையை நமது வாரிசுகளுக்கு நாம் அவர்களை ஆலயங்களுக்கு அழைத்து செல்லும் போது எடுத்துச் சொல்ல வேண்டும்.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வெறும் சடங்காக கருதாமல் அதில் உள்ள தாத்பர்யங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்தால்தான் திருக்கல்யாண நிகழ்வுகள் மூலம் வெற்றியும் பலனும் கிடைக்கும்.

    இதே போல ஆலயங்களில் கார்த்திகை மாதம் நடத்தப்படும் சங்காபிஷேகத்தால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து வற்றாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம். அது பற்றி அடுத்த வாரம் விரிவாக காணலாம்.

    Next Story
    ×